பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ‘ஜூலை 20–ந்தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்துங்கள்’


பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ‘ஜூலை 20–ந்தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்துங்கள்’
x
தினத்தந்தி 22 Jun 2017 9:33 PM GMT (Updated: 22 Jun 2017 9:33 PM GMT)

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

புதுடெல்லி,

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் டிசம்பர் 30–ந்தேதிக்குள் மாற்றிக்கொள்ளலாம் எனவும் கூறியது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் கோடிக்கணக்கில் மேற்படி நோட்டுகளை பொதுமக்கள் மாற்றினர். இந்த நோட்டுகள் அந்தந்த வங்கிகளில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. இந்த நோட்டுகள் அனைத்தையும் 30 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்துமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள அறிவிப்பில், மேற்படி நோட்டுகளை அடுத்த மாதம் (ஜூலை) 20–ந்தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது.

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கடந்த டிசம்பர் 30–ந்தேதி வரை பெற்றுக்கொண்ட நோட்டுகளும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் நவம்பர் 10 முதல் 14–ந்தேதி வரை பெற்றுக்கொண்ட நோட்டுகள் மட்டுமே பெறப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story