காஷ்மீரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அடித்துக் கொலை முதல்-மந்திரி கண்டனம்


காஷ்மீரில் போலீஸ் துணை சூப்பிரண்டு அடித்துக் கொலை முதல்-மந்திரி கண்டனம்
x
தினத்தந்தி 23 Jun 2017 10:40 PM GMT (Updated: 23 Jun 2017 10:40 PM GMT)

ஸ்ரீநகர் மசூதி அருகே போலீஸ் துணை சூப்பிரண்டு அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜாமியா மஸ்ஜித் எனப்படும் புகழ்பெற்ற மசூதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு தொழுகை நடந்தது. நள்ளிரவில் இந்த தொழுகையை முடித்து மக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முகமது அயூப் என்ற போலீஸ் துணை சூப்பிரண்டு, மசூதியில் இருந்து வெளியேறியவர்களை சந்தேகத்திற்கிடமான வகையில் புகைப்படம் எடுத்தார். இது குறித்து ஒருசிலர் அவரிடம் தட்டிக்கேட்டனர். உடனே முகமது அயூப், தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டதாக தெரிகிறது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

அடித்து உதைத்தனர்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப்பிடித்து நிர்வாணமாக்கி அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது கற்களும் வீசப்பட்டன. இதில் படுகாயமடைந்த முகமது அயூப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், முகமது அயூப்பின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அவர்கள், சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்

போலீஸ் துணை சூப்பிரண்டு அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிவினைவாதிகளின் போராட்ட அழைப்பை முன்னிட்டு பல இடங்களில் போலீசார் விதித்த கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் வைக்கப்பட்டு இருந்த போலீசாரின் பாதுகாப்பு அரண்களை அவர்கள் அடித்து உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

முதல்-மந்திரி கண்டனம்

கொல்லப்பட்ட முகமது அயூப்பின் உடலுக்கு முதல்-மந்திரி மெகபூபா முப்தி மற்றும் மந்திரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். முகமது அயூப்பின் கொலைக்கு மெகபூபா கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘பாதுகாப்பு பணியில் இருந்த முகமது அயூப், தான் பாதுகாப்புடன் இருக்கிறேன் என்ற நம்பிக்கையின் பேரில் தனது பாதுகாவலர்களை அங்கிருந்து அனுப்பி உள்ளார். அந்த சூழலில் அவர் கொல்லப்பட்டு இருப்பது ஒரு நம்பிக்கை கொலை ஆகும்’ என்றார். 

Next Story