செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.7 கோடி நோட்டுகளுடன் சினிமா தயாரிப்பு நிர்வாகிகள் 2 பேர் கைது


செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.7 கோடி நோட்டுகளுடன்  சினிமா தயாரிப்பு நிர்வாகிகள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2017 11:10 PM GMT (Updated: 23 Jun 2017 11:10 PM GMT)

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள ரூ.1,000, 500 நோட்டுகளுடன் சினிமா தயாரிப்பு நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐதராபாத்,

சென்னையில் வசித்துக்கொண்டு, கடந்த ஆண்டு ஜியோ ஸ்டார் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை தொடங்கியவர், கோட்டீஸ்வர் ராஜூ. இவரது பூர்வீகம் ஆந்திரா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை தயாரித்து வந்தார்.

இவரிடம் ஆந்திராவின் குகத்பள்ளி பகுதியை சேர்ந்த பூர்ணம் புருசோத்தம் (வயது 50) என்பவரும், போராபந்தா பகுதியை சேர்ந்த பாலட்டி சீனிவாசராவ் என்பவரும் சினிமா தயாரிப்பு நிர்வாகிகளாக வேலை பார்த்து வந்தார்கள்.

ரூ.7 கோடி நோட்டுகள்

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கோட்டீஸ்வர் ராஜூ, தன்னிடம் சினிமா தயாரிப்பு நிர்வாகிகளாக வேலை பார்த்து வந்த பூர்ணம் புருசோத்தமையும், பாலட்டி சீனிவாச ராவையும் அழைத்தார்.

“என்னிடம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் உள்ளன. ரூ.7 கோடி மதிப்பிலான இந்த நோட்டுகளை நீங்கள் மாற்றித்தந்தால் உங்களுக்கு உரிய கமிஷன் தருகிறேன்” என கூறினார்.

அதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஐதராபாத் சென்ற கோட்டீஸ்வர் ராஜூ, ரூ.7 கோடி மதிப்பிலான அந்த நோட்டுகளை இருவரிடமும் ஒப்படைத்தார். அதை அவர் கள் தங்கள் அலுவலகத்தில் வைத்துக்கொண்டு, மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சுற்றி வளைத்து கைது

ஆனால் இதுபற்றி ஐதராபாத்தில் உள்ள மத்திய மண்டல சிறப்பு போலீஸ் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று பூர்ணம் புருசோத்தமையும், பாலட்டி சீனிவாச ராவையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 கோடி மதிப்பிலான பழைய ரூ.1,000, 500 நோட்டுகளையும் கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து அவர்களையும், கைப்பற்றிய ரூபாய் நோட்டுகளையும் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர். பட அதிபர் கோட்டீஸ்வர் ராஜூ தலைமறைவாகி விட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

Next Story