‘இந்தி மொழி நமது அடையாளம்’ வெங்கையா நாயுடுவின் கருத்தால் சர்ச்சை


‘இந்தி மொழி நமது அடையாளம்’ வெங்கையா நாயுடுவின் கருத்தால் சர்ச்சை
x
தினத்தந்தி 24 Jun 2017 11:30 PM GMT (Updated: 24 Jun 2017 9:01 PM GMT)

இந்தி மொழி நமது அடையாளம் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார். அவருடைய இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆமதாபாத், 

பாராளுமன்றத்தில் எம்.பி.க்களும், மத்திய மந்திரிகளும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்து கருத்து கூறி இருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசு இந்தியை கட்டாயமாக திணிக்கிறது என்று இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் கட்சி தலைவர்கள் அப்போது கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்தி மொழிக்கு ஆதரவாக வெங்கையா நாயுடு நேற்று மீண்டும் சர்ச்சை கிளப்பும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தார்.

ஆமதாபாத் நகரில் அவர் கூறியதாவது:-

நமது அடையாளம்

இந்திதான் நமது தாய்மொழி. அதுதான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மனப்பான்மை கொண்ட மக்கள் போல நினைத்துக்கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல.

இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை. வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று தங்களை வளைத்துக் கொள்வது துரதிர்ஷ்டவசமானது.

நமது தாய்மொழியை கற்றுக்கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். அதே நேரம் இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும். இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடைபெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் சர்ச்சை

ஏற்கனவே, இந்தி மொழி தொடர்பாக வெங்கையா நாயுடு எழுப்பிய சர்ச்சை ஓயாத நிலையில் அவருடைய இந்த பரபரப்பு பேச்சால் மீண்டும் சர்ச்சை உருவாகி உள்ளது. 

Next Story