நெருக்கடி நிலை பிரகடனம்தான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது வெங்கையா நாயுடு அறிக்கை


நெருக்கடி நிலை பிரகடனம்தான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது வெங்கையா நாயுடு அறிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2017 11:45 PM GMT (Updated: 24 Jun 2017 9:15 PM GMT)

நெருக்கடி நிலை பிரகடனம், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி. அதுதான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது -வெங்கையா நாயுடு

சென்னை,

இந்திரா காந்தியால் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி. அதுதான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி இந்திராகாந்தியால் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் எவ்வாறு அடிப்படை உரிமைகளை எல்லாம் பறித்தன. ஜனநாயக முறைகளுக்கு மாறாக எவ்வாறு பிறப்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் விளக்கிவிட்டு அவர் மேலும் கூறியதாவது:-

அரசியல்வாதியாக மாற்றியது

நெருக்கடி நிலை பிரகடனம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றி அமைத்து, என்னை முழுமையான அரசியல்வாதியாக மாற்றியது என்பதை நினைவுகூற விரும்புகிறேன். 1974-75-ம் ஆண்டுகளில் நான் மாணவனாக இருந்தேன். அப்போது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் தீவிரமாக இருந்தேன். ஊழலுக்கு எதிராக ஜெயபிரகாஷ் நாராயணன் ஒரு சமூக பொருளாதார ஜனநாயக புரட்சிக்கு அழைப்பு விடுத்த நேரத்தில், நான் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்ற அவரை அழைத்தேன். இதுதான், அதன்பின்பு 17½ மாதங்கள் என்னை சிறையில் அடைப்பதற்கான ஒரு காரணமாக கூறப்பட்டது.

நான் விஜயவாடாவில் ஒரு இளைஞர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றபோது நெருக்கடி நிலை பிரகடனம் பற்றி தகவல் எங்களுக்கு கிடைத்தது. என்னை உடனடியாக தலைமறைவாக போகச்சொல்லி எல்லோரும் கூறினர். இதையொட்டி, அடுத்த 2 மாதங்கள் தலைமறைவாக இருந்தேன். எனக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடி நிலைக்கு எதிரான குறிப்பேடுகளை வினியோகிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பல இடங்களில் நாங்கள் நெருக்கடி நிலைக்கு எதிராக போராட மாணவர்களை ஊக்குவித்தோம். சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் இந்த நோட்டீசுகளை வீசி எறிந்துவிட்டு, அங்கிருந்து மறைந்து சென்றுவிடுவோம்.

காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் முன்பு கரும்பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். நான் அங்குபோய் நெருக்கடி நிலை பிரகடனத்துக்கு எதிராக எதையாவது எழுதிவிட்டு மறைந்து சென்றுவிடுவேன். போலீசாரின் கழுகு கண்களில் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல. நான் எனது நண்பர்கள் வீடுகளிலும், சித்தூர்-பெங்களூரு எல்லையில் உள்ள ஒதுக்குப்புறமான இடங்களிலும் மறைந்து வாழ்ந்தேன். அந்தநேரங்களில் நான் இத்தகைய எண்ணங்கள் கொண்ட மக்களுடன் கூட்டம் நடத்தி, நெருக்கடி நிலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன். தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியால் நெருக்கடி நிலை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அந்தநேரத்தில் நான் பழம்பெரும் அரசியல் தலைவரான காமராஜ் நாடாரை, மூத்த தலைவர்களான தென்னெட்டி விசுவநாதம், நீலம் சஞ்சீவரெட்டி ஆகியோருடன் சென்று சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது காமராஜர் படுக்கையில் இருந்தார். மிகவும் துயரமான நிலையில் நொறுங்கிப்போய் இருந்தார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டவுடன், அவர் எல்லாம் போச்சு, என் தப்பு என்று கூறியிருக்கிறார். இந்திரா காந்தியை பிரதமராக்க அவர் ஆற்றிய முக்கிய பங்கை குறிப்பிட்டுதான் அவர் இவ்வாறு கூறினார்.

அப்போது ஏராளமானவர்கள் இந்திய பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்கள். வக்கீல்களும் மற்றும் பலரும் இதை எதிர்த்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் இந்த விதிகளை இந்திரா பாதுகாப்பு சட்டம் என்று அழைப்போம். இதுபோல, மிசா என்று கூறப்படும் உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, எல்லோருக்கும் எதிராக அது பயன்படுத்தப்பட்டது. நாங்கள் அதை இந்திரா பாதுகாப்பு பராமரிப்பு சட்டம் என்று அழைப்போம்.

பத்திரிகைகள் முழுமையான தணிக்கை முறைகளால் அவதியுற்றது. நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது விஜயவாடா அருகே கைது செய்யப்பட்டேன். யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்கும் வகையில் நான் எப்போதும் ஸ்கூட்டரின் பின்னால் ஒரு பெண் போராட்ட வீரரை அழைத்துக்கொண்டு செல்வேன்.

கைது

ஆனாலும், ஜெய் ஆந்திரா இயக்க நாட்களில் என்னை நன்கு அறிந்திருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர், என் ஸ்கூட்டரை மறித்து என்னை கைது செய்து அழைத்து சென்றார்.

என்னை விசாகப்பட்டினம் ஜெயிலில் பழம்பெரும் தலைவர்களான கவுத்து லட்சண்ணா, தென்னெட்டி விசுவநாதம், பிரபல தெலுங்கு இலக்கியவாதி ரவிசாஸ்திரி, புரட்சிகர எழுத்தாளர் சலாசனி பிரசாத் ஆகியோருடன் அடைத்தார்கள்.

அதே ஜெயிலில் நக்சல்பாரிகள் சிலர் மற்றும் வெளிப்படையாக பேசும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், லோகியா ஆதரவாளர்கள் ஆகியோரும் அடைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் உறுதிப்பாடு குறையவில்லை. ஜெயில் வாழ்க்கை எங்களை சோர்வடைய செய்யவில்லை. எங்களுக்குள் பல கருத்துக்களை பறிமாறிக்கொள்வோம். புத்தகங்கள் படிப்போம். தினமும் கைப்பந்து, பேட்மிண்டன் விளையாடுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் உணவு தயாரிப்பதை கவனித்துக்கொள்வோம். அங்கு நடந்த விவாதங்கள் என்னிடம் அறிவாற்றலை பெருக்கியது.

நாங்கள் சங்கராந்தி போன்ற பல பண்டிகைகளை அரிசலு போன்ற உணவு பொருட்களை தயாரித்து கொண்டாடுவோம். ஜெயிலில்தான் நான் சமையலை கற்றுக்கொண்டேன். அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர்கள் கவலையால் சோர்ந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுடன், நான் பேசி அவர்களை உற்சாகப்படுத்தி, இந்த ஏதேச்சிகார ஆட்சியைக் எதிர்த்து போராடவேண்டிய நேரத்தில், உணர்வு பூர்வமாகவும், உடல்ரீதியாகவும் வலுவாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்கூறுவேன்.

இத்தகைய சர்வாதிகார நிலைமைகளை எதிர்த்து போராடவேண்டும் என்ற எனது உறுதிப்பாடு என்னை வலுப்படுத்தியது. சட்டத்தொழிலில் ஈடுபடுவதற்காக பதிலாக, அரசியலில் நுழைய தீர்மானித்தேன். உயர்நீதிமன்றத்தில் நான் ஒரு வழக்கை தொடர்ந்து, நானே வாதாடினேன். பின்பு எங்களுக்கு வழங்கப்படும் பத்திரிகைகள் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட நிலையில், ஜெயில் அதிகாரிகளால் மீண்டும் தணிக்கை செய்யப்படுவதை எதிர்த்து ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை ஐகோர்ட்டு உறுதிசெய்தது. என்னை ஐதராபாத் அருகே நெல்லூர் சிறைக்கு மாற்றவேண்டும் என்ற எனது கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.

இந்த காலக்கட்டத்தில் சஞ்சய் காந்தி விசாகப்பட்டினம் வருகிறார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அவருடைய பொதுக்கூட்டத்தில் இடையூறு செய்யவேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்தது. உடனே நாங்கள் ஜெயிலில் இருந்து தற்காலிகமாக வெளியே வருவதற்கான வழக்கமான நடைமுறையான உடல்நல குறைவால் மயக்கமடைந்ததுபோல காட்டிக்கொண்டோம். எங்களை கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டுசென்று அங்கு அனுமதித்தனர்.

அங்கு நாங்கள் மற்றவர்களை சந்தித்து அவர்களோடு எங்கள் திட்டம் குறித்து விவாதித்தோம். சஞ்சய் காந்தியின் கூட்டம் மிக கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது சில இளைஞர்கள் அங்கு சென்று பிளாஸ்டிக் பைகளுக்குள் அவர்கள் எடுத்துச்சென்ற தண்ணீர் பாம்புகளை கூட்டத்துக்குள் விட்டு பாம்பு, பாம்பு என்று கத்தி, ஒரு பெரிய குழப்பத்தை உருவாக்கினர். மக்கள் அங்குமிங்கும் ஓடினர். லத்தி சார்ஜ் நடந்தது. கூட்டம் நடக்காமல் நின்றுபோய்விட்டது.

அதன்பின்பு ஜெயில் சூப்பிரண்டு அரசுக்கு நான் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று ஒரு அறிக்கை அனுப்பினார். எனவே, என்னை அங்கிருந்து ஐதராபாத்தில் உள்ள முஷீராபாத் சிறைசாலைக்கு கொண்டு அடைத்தனர். அவ்வாறு கொண்டுசெல்லும்போது என் கைகளில் விலங்கு மாட்டி அழைத்து சென்றனர். பின்பு என்னை நெல்லூர் சிறைக்கு கொண்டுசெல்லும்போது கையில் விலங்குகளை மாட்டி அழைத்துச்சென்றனர். என் கையில் மாட்டியிருக்கும் விலங்கை கழற்றவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நெல்லூருக்கு என்னை அழைத்துச்சென்ற வேன் போய் சேர்ந்தவுடன், நான் என் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜெயிலுக்கு நடந்தே சென்றேன். நான் எவ்வாறு நடத்தப்படுகிறேன் என்பதை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக இப்படி சென்றேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல, எனது ஜெயில்வாசம் ஏதேச்சதிகாரத்தையும், சர்வாதிகாரத்தையும் எதிர்த்துப்போராட எனக்கு இருந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. நெருக்கடி நிலை பிரகடனம்தான் இந்த நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகும். இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் தெரிந்துகொள்ள வைக்கவேண்டும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். 

Next Story