நேபாளம், பூடானுக்கு பயணிக்க அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது உள்துறை அமைச்சகம்


நேபாளம், பூடானுக்கு பயணிக்க அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது உள்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:20 AM GMT (Updated: 25 Jun 2017 10:19 AM GMT)

நேபாளம் மற்றும் பூடானுக்கு பயணம் மேற்கொள்ள அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,


இந்தியர்கள் அண்டைய நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்ல விசா தேவையில்லை, இந்திய அரசு வழங்கிய பாஸ்போர்ட் மற்றும் தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையே போதுமானது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்கு கீழான சிறார்கள் அங்கு பயணிக்க அவர்களுடைய வயதை உறுதி செய்யும் விதமான அடையாள அட்டையுடன் செல்லலாம். பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், மத்திய அரசின் சுகாதார சேவை அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு போன்றவை அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு செல்ல ஆதார் ஒரு ஏற்றுக் கொள்ளக்கூடிய பயண ஆவணம் கிடையாது என மத்திய உள்துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய, மாநில அரசுக்களின் நலதிட்டங்களில் மக்கள் பயனடைய ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு வரும் விவகாரம் பெரும் சர்ச்சையாகி வருகிறது. இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்கி வரும் நிலையில் தான் நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு செல்ல ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் ஜாய்கோன் பகுதிக்கு எதிராக இந்தோ - பூடான் எல்லையில் உள்ள பகுண்ட்சோலிங்கில் உள்ள பூடான் குடியுரிமை அதிகாரிகளிடம் இந்திய அடையாள அட்டையை காண்பித்து உள்ளே செல்ல அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதேபோன்றுதான் இந்தியா - நேபாள எல்லையிலும் நிலவுகிறது, இந்திய அரசின் அடையாள அட்டையை காண்பித்து நேபாளத்திற்குள் செல்ல முடியும். நேபாளம் இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களை எல்லையாக கொண்டு உள்ளது.

 நேபாளத்தில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். பூட்டான் சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை எல்லையாக கொண்டது. இந்நாட்டிலும் இந்தியர்கள் 60 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். பூடானில் இவர்கள் நீர்மின் சக்தி மற்றும் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 8 முதல் 10 ஆயிரம் வரையிலான தினசரி கூலி தொழிலாளர்கள் வேலை காரணமாக பூடானுக்கு தினமும் சென்று வருகிறார்கள். 


Next Story