காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் பதுங்கிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2017 12:00 AM GMT (Updated: 26 Jun 2017 1:55 AM GMT)

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை வீரரை கொலை செய்துவிட்டு, பள்ளிக்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புபடை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை வீரரை கொலை செய்துவிட்டு, பள்ளிக்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புபடை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் பந்தாசவுக் என்ற இடத்தில் மிகப்பெரிய அரசுப்பள்ளி உள்ளது. ஸ்ரீநகர்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், ராணுவப்படை தலைமையகத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த பள்ளி அமைந்து உள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கு அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கி மற்றும் தானியங்கி ஆயுதங்களால் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து பயங்கரவாதிகள் அதிரடியாக பள்ளிக்குள் நுழைந்தனர். அப்போது பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் யாரும் இல்லை. பள்ளி ஊழியர்கள் மட்டும் இருந்தனர். பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பள்ளியை சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புபடை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து பாதுகாப்புபடை வீரர்கள் பதில் தாக்குதலை தொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. பின்னர் இருள் சூழ்ந்ததால் சண்டை நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நேரத்தில், பாதுகாப்புபடை வீரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் நேற்று அதிகாலையில் மீண்டும் பயங்கரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புபடை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு அவர்களும் துப்பாக்கி மற்றும் தானியங்கி ஆயதங்களை கொண்டு தாக்கினர். நீண்ட நேரம் நீடித்த சண்டையின் இறுதியில் பயங்கரவாதிகள் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக பயங்கரவாதிகள் சுட்டதில் பாதுகாப்புபடை அதிகாரி உள்பட 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பள்ளிக்குள் வேறு பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனரா? வெடிபொருட்கள் ஏதும் உள்ளதா? என்பதை அறிய பாதுகாப்புபடை வீரர்கள் பள்ளியில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் டி.ஜி.பி. வாயித், ‘‘ பயங்கரவாதிகள் பள்ளி கட்டிடத்தை தகர்த்தெறியும் நோக்கில் நுழைந்தனர். இதன் மூலம் மாணவர்களின் படிப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்பதே அவர்களது கொடிய எண்ணம். ஆனால் அது போன்று எதுவும் நடக்காமல் தடுக்கப்பட்டு விட்டது’’ என தெரிவித்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர்–இ–தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு பந்தாசவுக் மற்றும் அதனை சுற்றி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்புபடை வீரர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டதால், அந்த பகுதிகளில் பாதுகாப்புபடை வீரர்கள் குவிக்கப்பட்டதோடு, 144 தடை உத்தரவு போடப்பட்டது.

இதற்கிடையே, ரஜோரி மாவட்டத்தில் நவ்சரா செக்டார் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று அதிகாலையில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.


Next Story