லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது ரிசர்வ் வங்கி தகவல்


லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டு போனால் வங்கி பொறுப்பு ஆகாது ரிசர்வ் வங்கி தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2017 10:30 PM GMT (Updated: 25 Jun 2017 8:29 PM GMT)

லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டுபோனால், வங்கி பொறுப்பு ஆகாது என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

புதுடெல்லி,

லாக்கரில் வாடிக்கையாளர் வைக்கும் பொருட்கள் திருட்டுபோனால், வங்கி பொறுப்பு ஆகாது என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.

வங்கிகளில் உள்ள லாக்கரில் விலை உயர்ந்த பொருட்கள், நகைகள் போன்றவற்றை வைத்தால் அவை பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஒரு வேளை அவை திருட்டு போய்விட்டால், வங்கி நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்று விடும் என்றும் பொதுமக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மையல்ல, வங்கிகள் அதற்கு பொறுப்பு ஏற்காது என்ற கசப்பான உண்மை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வக்கீல் குஷ் கல்ரா என்பவர் எழுப்பிய கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கியும், 19 பொதுத்துறை வங்கிகளும் அளித்த பதிலில் தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பை பொதுத்துறை வங்கிகள் துறப்பதையே அது காட்டியது.

இந்தப் பதில், அந்த வக்கீலை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதையடுத்து அவர் சி.சி.ஐ. என்னும் இந்திய போட்டி ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:–

* வாடிக்கையாளருக்கு இழப்பு ஏற்பட்டால் அதை அளவிடுவது தொடர்பாக, தான் எந்தவொரு குறிப்பிட்ட வழிகாட்டும் நெறிமுறையையும் வெளியிடவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

* பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, யூகோ வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 19 வங்கிகள் ஒருமனதாக, லாக்கர்களை பொறுத்தவரையில், தங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உள்ள உறவு, வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்பவருக்கும் இடையேயான உறவைப் போன்றதுதான் என்று கூறுகின்றன.

* அப்படிப்பட்ட நிலையில், வங்கி லாக்கரில் வைக்கிற விலை உயர்ந்த பொருட்களுக்கு, அவற்றை வைக்கிற வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பு என்று வங்கிகள் சொல்கின்றன.

* சில வங்கிகள் மட்டும் லாக்கர் தொடர்பான வாடகை ஒப்பந்தத்தில், அவற்றில் வைக்கக்கூடிய பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள்தான் பொறுப்பு, அவர்கள் தங்களது சுய விருப்பத்தின்பேரில்தான் பொருட்களை வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளன.

* அனைத்து வங்கிகளும் கூறுகிற பொதுவான லாக்கர் விதிமுறை, ‘‘லாக்கர் ஒப்பந்தத்தின்படி, லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைக்கிற பொருட்களுக்கு திருட்டு, கொள்ளை, சண்டை போன்றவற்றால் இழப்போ, சேதமோ ஏற்பட்டால், வாடிக்கையாளர்தான் பொறுப்பை ஏற்க வேண்டும்’’ என்பதுதான்.

* வங்கிக்கு வாடிக்கையாளர் வாடகை கொடுத்து லாக்கரில் விலை உயர்ந்த பொருட்களை வைத்தும், அவற்றுக்கான பொறுப்பை வங்கி ஏற்காதபோது, அதற்கு பதிலாக விலை உயர்ந்த பொருட்களை காப்பீடு செய்து விட்டு, அவற்றை வீட்டிலேயே வைத்துக்கொள்ளலாமே?

* வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற வி‌ஷயங்களில் வங்கிகள் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

* வங்கிகள் கூட்டமைப்பு அல்லது சங்கம் அமைப்பது, வாடிக்கையாளர்களின் நலன்களை நேரடியாகப் பாதிக்கும் வகையில் சேவைகளின் மேம்பாட்டை குறைக்கும் முயற்சிதான்.

* லாக்கர் சேவையில் வங்கிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவது பற்றி போட்டி சட்டத்தின்கீழ் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story