நெருக்கடி நிலையை நினைவுபடுத்தி வானொலியில் பிரதமர் மோடி உரை


நெருக்கடி நிலையை நினைவுபடுத்தி வானொலியில் பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 26 Jun 2017 12:15 AM GMT (Updated: 26 Jun 2017 1:41 AM GMT)

காங்கிரஸ் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை வானொலி உரையில் நினைவுபடுத்திய பிரதமர் மோடி

புதுடெல்லி,

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் மன் கீ பாத் (மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் உரையாற்றுவது வழக்கம். நேற்று அவர், தனது உரையில் பூரி ஜெகநாதர் கோவில் ரதயாத்திரை, ரம்ஜான் பண்டிகை பற்றி குறிப்பிட்டார்.

அவர் பேசும்போது கூறியதாவது:–

இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாகவே இருந்தது. நல்லவேளையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் வருகை, பருவ நிலையை இனிமையானதாக மாற்றி இருக்கிறது.

இன்று பகவான் ஜெகநாதரின் ரதயாத்திரையை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியோடு கொண்£டாடி வருகின்றனர். பூரி ஜெகநாதர் கோவிலின் பாரம்பரியத்தை டாக்டர் அம்பேத்கர் உயர்வாக போற்றுவது உண்டு என்பது அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். ஏனென்றால் இதில் சமூக நீதி, சமூக சமத்துவம் ஆகியவை பொதிந்து உள்ளன.

இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நமது தனிச்சிறப்பு, பலம். புனித ரமலான் மாதத்தில் அனைவரும் தூய பிரார்த்தனைகள் செய்தனர். தற்போது ஈகை பண்டிகை வந்து இருக்கிறது. அனைவருக்கும் ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்.

1975–ம் ஆண்டு ஜூன் 25–ந் தேதி அன்று நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட நாட்டின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். நீதியமைப்பும் கூட இந்த அவசர நிலைகாலத்தில் பயங்கர பாதிப்புக்கு உள்ளானது.

மக்களாட்சியை விரும்புவோர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்ப்பு கிடைத்தபோது தேர்தல் வாயிலாக மக்கள் தங்களின் சக்தியை வெளிப்படுத்தினர். மக்களின் ரத்தத்தில் கலந்த மக்களாட்சி முறை என்ற உணர்வுதான் நமது நிரந்தர பாரம்பரியம். இதை நாம் மேலும் உறுதி கொண்டதாக ஆக்கவேண்டும்.

குஜராத் முதல்–மந்திரியாக நான் இருந்தபோது வரவேற்க பூங்கொத்து அளிப்பது தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக கதராடை கைக்குட்டைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் கதராடைகளுக்கு ஊக்கம் அளிக்கமுடியும். ஆனால் அங்கிருந்து வந்த பிறகு, இந்த பழக்கம் விடுபட்டு போயிருக்கிறது.

விளையாட்டுகள் நமக்கு விளையாட்டு உணர்வை ஏற்படுத்துகின்றன. எனவே நாம் விளையாட்டுகளுக்கு ஊக்கமளிக்கவேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டில் விளையாட்டுகள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன. பிள்ளைகள் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டால் அவர்களை மைதானத்தில் இருந்து விலக்கி அறைக்குள் பூட்டி வைத்து படிக்கவேண்டும் என வற்புறுத்தக்கூடாது. அவர்கள் படிக்கவும் செய்யட்டும், அதில் முன்னேற்றமும் அடையட்டும்.

அதே நேரம் விளையாட்டில் அதிக திறமையோ ஆர்வமோ இருந்தால் பள்ளிக்கூடம், கல்லூரி, குடும்பம், அக்கம்பக்கத்தில் இருப்போர் என அனைவரும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் கனவை அனைவரும் காணவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story