புதிதாக நிறுவப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கொடி மரம் சேதம் 5 பேரை பிடித்து விசாரணை


புதிதாக நிறுவப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கொடி மரம் சேதம் 5 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 25 Jun 2017 11:30 PM GMT (Updated: 25 Jun 2017 8:52 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தங்க கொடி மரம் சேதப்படுத்தப்பட்டது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட தங்க கொடி மரம் சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய தங்க கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டாக ரூ.3.20 கோடி செலவில் புதிய கொடிமரம் வடிவமைப்பு பணிகள் நடந்து வந்தது.

புதிய கொடி மரத்தில் 9 கிலோ 161 கிராம் எடையுள்ள தங்க தகடுகள் பதிக்கப்பட்டது. இந்த கொடி மரத்தில் 300 கிலோ தாமிரமும், 17 கிலோ வெள்ளியும் சேர்க்கப்பட்டு உள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், புதிய கொடி மர பிரதிஷ்டை நேற்று நடந்தது. இதையொட்டி சன்னிதானத்தில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பகல் 11.50 மணி முதல் 1.40 மணிக்கு இடையேயான சுப முகூர்த்தத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்து வைத்தார். அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அய்யப்பனை வழிபட்டனர். நிகழ்ச்சியில், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி, தேவஸ்தான தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் தங்க கொடி மரம் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.40 மணி அளவில் கொடி மரத்தின் சதுரவடிவ பீடத்தின் மீது பாதரசம் வீசப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.

இதைக் கண்ட கோவில் நிர்வாகிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் மாநில முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர், தங்க கொடி மரத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவிலுக்கு போலீஸ் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் விரைந்தனர்.

இந்த நிலையில் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது தங்க கொடி மரத்தை 5 பேர் சேதப்படுத்துவது போன்ற காட்சி பதிவாகி இருந்ததை அவர்கள் கண்டனர். இதைத் தொடர்ந்து கொடி மரத்தை சேதப்படுத்தியதாக சந்தேகத்தின்பேரில் ஒரு முதியவர் உள்பட 5 பேரை கோவில் நிர்வாகத்தினர் பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஐந்து பேரும் விசாரணைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி தேவஸ்தான தலைவர் பிரையார் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பிடிபட்ட ஐந்து பேரும், தங்க கொடி மர பீடத்தில் ஏதோவொரு திரவத்தை தெளிப்பது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரிய வந்தது. அனேகமாக இது பாதரசமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனினும், விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே தங்ககொடி மரத்தின் மீது பாதரசம் வீசி சேதப்படுத்திய சம்பவம் அய்யப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதை தொடர்ந்து, அய்யப்பன் கோவில் ஆண்டு திருவிழா வருகிற 28–ந்தேதி தொடங்குகிறது. திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 7–ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 28–ந்தேதி காலை 9.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியை ஏற்றி வைக்கிறார்.

ஜூலை 6–ந்தேதி இரவு 9.30 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 7–ந்தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு பம்பை நதிக்கரையில் அய்யப்பனுக்கு ஆறாட்டு நடைபெறும். மாலையில் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.


Next Story