பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் யோகி ஆதித்யநாத் அமைப்பை சேர்ந்த மூவர் கைது


பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் யோகி ஆதித்யநாத் அமைப்பை சேர்ந்த மூவர் கைது
x
தினத்தந்தி 27 Jun 2017 9:38 AM GMT (Updated: 27 Jun 2017 9:38 AM GMT)

உ.பி.யில் கூட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் இந்து யுவ வாகினி அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


பரேலி,

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தல் மற்றும் போலீஸ் அதிகாரியை தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினி அமைப்பை சேர்ந்த மூவரை போலீஸ் கைது செய்து உள்ளது. 

கணேஷ்நகர் பகுதியில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிபரப்பு செய்வது தொடர்பாக நேற்று இரவு தீபக் மற்றும் அவினாஷ் என்ற இரு வாலிபர்களுக்கு இடையே மோதல் எற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவினாஷ் தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு தீபக் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். அங்கிருந்த பெண்களிடம் தவறாக அவர்கள் நடந்துக் கொண்டனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவினாஷ், அவருடைய நண்பர்கள் இந்து யுவ வாகினி அமைப்பை சேர்ந்தவர்கள். இதனையடுத்து தீபக் அவினாஷை அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்து உள்ளார். 

இதுதொடர்பாக செய்திகள் பரவியதும் இந்து யுவ வாகினி அமைப்பின் பிராந்திய தலைவர் ஜிதேந்திர சர்மா போலீஸ் நிலையம் சென்று உள்ளனர். பிற யுவ வாகினி அமைப்பினரும் அங்கு கூடினர். போலீஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் உமேஷ் காதாரியாவும் அங்கு சென்று உள்ளார். காவல் நிலையத்தில் போலீசாரிடம் இந்து யுவ வாகினி அமைப்பினர் மோசமாக நடந்து கொண்டு உள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அரோராவை பாரதீய ஜனதா தலைவர் உமேஷ் தாக்கி உள்ளார். இது தொடர்பாக அம்மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இரு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்து உள்ளார். 

அரோரா அளித்த புகாரின்படி அவினாஷ், ஜிஜேந்திரா, பங்காஜ் உள்ளிட்டோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெண் ஒருவர் தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி புகார் கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக மூன்று பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவினாஷ், ஜிஜேந்திரா, பங்காஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என போலீஸ் தெரிவித்து உள்ளது, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story