இறைச்சிக்காக மாடு விற்பனை விவகாரத்தில் இடைக்கால தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிப்பு


இறைச்சிக்காக மாடு விற்பனை விவகாரத்தில் இடைக்கால தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2017 6:03 AM GMT (Updated: 28 Jun 2017 6:03 AM GMT)

இறைச்சிக்காக மாடு விற்பனை விவகாரத்தில் இடைக்கால தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அண்மையில் மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டு இருந்த அறிவிக்கையில், இளம் கால்நடைகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது. கால்நடை சந்தைக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்து வடிவில் ஒப்புதல் அளித்த பிறகே அந்த கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் கால்நடைகளை விற்பனை செய்கிறபோது, தன்னை விவசாயி என்று நிரூபிக்கும் வகையில் ஆவணங்களை வைத்திருப்பவர்களிடம் மட்டுமே கால்நடைகளை விற்க முடியும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசு விதித்தது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கால்நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி  ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்  செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்ய  மத்திய அரசு தடை விதித்ததற்கு எதிராக இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இந்த மனு இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, மாடு விற்பனை விவகாரத்தில் விதிக்கப்பட்ட  இடைக்கால தடை மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை அவகாசம் அளித்துள்ளது. 


Next Story