ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும்: மத்திய அரசு


ஜூலை 1ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும்: மத்திய அரசு
x
தினத்தந்தி 28 Jun 2017 6:56 AM GMT (Updated: 28 Jun 2017 6:56 AM GMT)

ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆதார்-பான் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம்.பான் கார்டை அரசின் மற்ற திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு பயன்படுத்த முடியாது. 

இந்த நிலையில், வருமான வரி செலுத்துவோர், தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது.

இந்த நிலையில் மத்திய அரசு இன்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் பான் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இதற்காக வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளது.வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. எனவே 1-ந்தேதி முதல் புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வோர் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும்.

நாட்டில் சுமார் 25 கோடி பேர் பான் கார்டு வைத்திருப்பதாகவும், சுமார் 111 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், சுமார் 2.07 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.


Next Story