வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் மோடியை சங்கடத்தில் இருந்து மீட்ட அஜித் தோவல்


வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் மோடியை சங்கடத்தில் இருந்து மீட்ட அஜித் தோவல்
x
தினத்தந்தி 28 Jun 2017 8:55 AM GMT (Updated: 28 Jun 2017 8:55 AM GMT)

வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் மோடியை சங்கடத்தில் இருந்து அஜித் தோவல் மீட்டார்.


வாஷிங்டன்,


அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் டிரம்பை அவர் சந்தித்தார். மோடியை வெள்ளை மாளிகையின் முற்றம் வரை வந்து டிரம்பும், அவருடைய மனைவி மெலனியாவும் வரவேற்றனர்.

இரு தலைவர்களும் 2 நாடுகளின் உறவுகள் குறித்து வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும். இருவரும் தனியாக 4 மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக இணைந்து வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் செய்தியாளார்களை சந்தித்து பேசினர். செய்தியாளர்களிடம் பேசுவதற்காக உரை தயாரிக்கப்பட்டு பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசவிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால், அவரின் கைகளில் இருந்து சில பக்கங்கள் காற்றில் பறந்து சென்றன.

ரோஸ் கார்டனில் இருநாட்டு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது முதல் வரிசையில், மற்ற மூத்த இந்திய அதிகாரிகளோடு தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் அமர்ந்து இருந்தார். உடனடியாக விரைந்த தோவல் காற்றில் பறந்த பக்கங்களை மீட்டு, பிரதமர் மோடியிடம் அளித்தார். சில நிமிடங்களிலேயே காற்று தன்னுடைய வேலையை காட்டியது. மீண்டும் காற்று வேகமாக அடித்ததால் பிரதமர் மோடியின் கைகளில் இருந்த காகிதங்கள் பறந்து சென்றது. மீண்டும் உடனடியாக எழுந்து சென்று அவற்றை மீட்டு, பிரதமர் மோடியிடம் அஜித் தோவல் ஒப்படைத்தார்.  

இதனால் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு ஏற்பட இருந்த சங்கடம் தவிர்க்கப்பட்டது.


Next Story