ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது, பிரதமர் மோடி, பழனிசாமி வாக்களித்தனர்


ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது, பிரதமர் மோடி, பழனிசாமி வாக்களித்தனர்
x
தினத்தந்தி 17 July 2017 5:06 AM GMT (Updated: 17 July 2017 5:24 AM GMT)

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.



புதுடெல்லி,

 ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 

(எம்.பி.க் களில் 543 பேர் மக்களவை உறுப்பினர்கள், 233 பேர் டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள்). ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு 10 மணிக்கு நடக்கிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து எம்.பி.க்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி வாக்களிக்கிறோம் என்றார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்த பின்னர் பேசுகையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்றார். மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். 

பின்னர் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்து வருகிறார்கள்.

கேரளாவை சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ அப்துல்லா சென்னையில் வாக்களித்தார். 

திமுக மூத்த தலைவர் துரைமுருகன் வாக்களித்த பின்னர் பேசுகையில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்றார். திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க வருவாரா? என கேள்வி எழுப்பட்ட போது கருணாநிதி வாக்களிப்பாரா என பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிவிட்டார் துரைமுருகன். 

புதுச்சேரி தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்.

இதுபோன்று பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Next Story