இமாச்சல பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு; 8 பேர் உயிரிழப்பு, இரு பேருந்துகள் சிக்கியது


இமாச்சல பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு; 8 பேர் உயிரிழப்பு, இரு பேருந்துகள் சிக்கியது
x
தினத்தந்தி 13 Aug 2017 10:01 AM GMT (Updated: 13 Aug 2017 10:00 AM GMT)

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 சிம்லா,

 
இமாச்சல பிரதேசத்தில் நேற்று இரவு மண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டடது.  மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து உள்ளது. இதனையடுத்து நள்ளிரவு 1.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. நிலச்சரிவில் மனாலியிலிருந்து காத்ராவுக்கும் மற்றொன்று மனாலியிலிருந்து சம்பாவுக்கும் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் சிக்கிக்கொண்டது எனவும் பேருந்துகள் தேநீர் இடைவேளைக்காக நள்ளிரவில் கோட்ருபியில் நிறுத்தப்பட்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடைபெற்று உள்ளது எனவும் மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

நிலச்சரிவில் சாலையை அடித்துச் சென்றதில் பேருந்துகள் 800 மீ பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது. ஒரு பேருந்தின் சுவடு கூட காணவில்லை, முழுதும் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பேருந்துகள் கிளம்பிய போது முறையே இரு பேருந்துகளிலும் 30 மற்றும் 40 பயணிகள் இருந்து உள்ளனர். நடுவில் ஏறியவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. விபத்து நடந்த பகுதிக்கு ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உள்ளூர் போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  

இதற்கிடையே 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர், தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என பிரதம அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story