பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்: முதல் மந்திரி விளக்கம்


பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்: முதல் மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 17 Aug 2017 10:48 AM GMT (Updated: 17 Aug 2017 10:48 AM GMT)

பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டது வழக்கமான நிர்வாக நடைமுறைதான் என்று முதல்மந்திரி விளக்கம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு நகரில் கர்ணகி அம்மன் பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புகார்கள் எழுந்ததும், மாவட்ட கலெக்டர் மேரிகுட்டி, அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் தேசிய கொடியை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளோ அல்லது பள்ளியின் ஆசிரியர்களோதான் ஏற்ற முடியும் என குறிப்பாணை அனுப்பினார். பள்ளி நிர்வாகம் அதனை பெற்று கொண்டது. ஆனால் எனினும் கலெக்டரின் உத்தரவை பள்ளி நிர்வாகத்தினர் ஏற்கவில்லை.

பள்ளிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதால் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றுவார் என  தெரிவிக்கப்பட்டது. அதன்படி மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். கலெக்டர் உத்தரவை மீறி பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றியதால் சர்ச்சை எழுந்தது. கலெக்டர் மேரிகுட்டி இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். இதுபற்றி வழக்குப்பதிவு செய்யும்படி போலீசையும் கேட்டுக் கொள்வோம் என்று கூறினார்.

இதற்கிடையில்,  பாலக்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த மேரிகுட்டி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான மேரிகுட்டிக்கு  பஞ்சாயத்து இயக்குநராக பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டது வழக்கமான நடைமுறைதான் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் குறித்து பதில் அளித்த போது  பினராயி விஜயன் இவ்வாறு  தெரிவித்துள்ளார். 

Next Story