அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது -ராகுல் புகார்


அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது -ராகுல் புகார்
x
தினத்தந்தி 17 Aug 2017 9:30 PM GMT (Updated: 17 Aug 2017 8:20 PM GMT)

அரசியல் சாசனத்தை மாற்ற ஆர்.எஸ்.எஸ். விரும்புவதாக சரத் யாதவ் கூட்டிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி புகார் கூறினார்.

புதுடெல்லி,

பீகாரில் நிதிஷ் குமார், பாரதீய ஜனதாவுடன் கரம் கோர்த்ததற்கு, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

டெல்லியில் நேற்று அவர் தனது செல்வாக்கை நிதிஷ் குமாருக்கு பறை சாற்றும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். ‘நாட்டின் கலப்பு கலாசாரத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் மனோஜ் ஜா, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி பாபு லால் மராண்டி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ராகுல் புகார்

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியபோது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தை நாட்டு மக்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கிறது. இந்த நாட்டில் தனது சித்தாந்தம், தேர்தல்களை வெற்றிகொள்ள உதவாது என்பதை ஆர்.எஸ்.எஸ். அறிந்திருக்கிறது. எனவேதான் இந்த நாட்டின் முக்கிய அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். தன் ஆட்களை கொண்டு நிரப்புகிறது.

அந்த அமைப்பு, நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறது.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை

மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இதுவரையில் தேசியக்கொடிக்கு ஆர்.எஸ்.எஸ். வணக்கம் செலுத்தியது இல்லை.

கருப்பு பணத்தை இந்தியாவில் கொண்டு வந்து சேர்ப்பதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதாகவும் 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பாரதீய ஜனதா நிறைவேற்றவில்லை. அவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுகிறார்களே அன்றி, விவசாயிகளுக்கு உதவுவது இல்லை.

நாங்கள் விரும்புவது உண்மை இந்தியா

கடன் தள்ளுபடி செய்வது தங்கள் அரசின் கொள்கை இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் பேசுகிறார். விவசாயிகள் செத்தால், அதைப்பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் கொண்டு வந்தார். ஆனால், பெரும்பாலான பொருட்கள் சீனாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. உண்மையை சொல்வதென்றால், மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி கண்டுள்ளது.

மோடி தூய்மை இந்தியாவை உருவாக்குவதே தனது விருப்பம் என்று சொல்கிறார். ஆனால் நாங்கள் விரும்புவது உண்மையான இந்தியா.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story