16 வயது பெண்ணை மணந்த 65 வயது வெளிநாட்டுக்காரர் பெண்ணின் தாயார் போலீசில் புகார்


16 வயது பெண்ணை மணந்த 65 வயது வெளிநாட்டுக்காரர் பெண்ணின் தாயார் போலீசில் புகார்
x
தினத்தந்தி 17 Aug 2017 9:45 PM GMT (Updated: 17 Aug 2017 8:28 PM GMT)

ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுக்கும், ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஐதராபாத்,

ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுக்கும், ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. தற்போது, அப்பெண் மஸ்கட்டில் கணவருடன் இருக்கிறார்.

இதற்கிடையே, அப்பெண்ணின் தாயார் ஐதராபாத் போலீசில் புகார் அளித்ததன் மூலம், இந்த திருமணம் வெளியே தெரியவந்துள்ளது. தன் மகளை ஓமன் முதியவர் கொடுமைப்படுத்துவதாக அவர் புகாரில் கூறியுள்ளார். மகளை திருப்பி அனுப்புமாறு கூறியபோது, ‘உங்கள் மைத்துனியின் கணவர் சிக்கந்தருக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறேன். அதை திருப்பி கொடுத்தால், உங்கள் மகளை திருப்பி அனுப்புகிறேன்’ என்று ஓமன் முதியவர் கூறியதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், ஓமன் நாட்டுக்காரர், சிக்கந்தர், அவருடைய மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 16 வயது இளம்பெண்ணை இந்தியாவுக்கு அழைத்துவர மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

Next Story