கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்ற பா.ஜனதா 4 ஆண்டுகளில் ரூ.706 கோடி வசூல்


கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதிக நன்கொடை பெற்ற பா.ஜனதா 4 ஆண்டுகளில் ரூ.706 கோடி வசூல்
x
தினத்தந்தி 17 Aug 2017 10:15 PM GMT (Updated: 17 Aug 2017 8:35 PM GMT)

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்ற கட்சிகளில் பா.ஜனதாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அக்கட்சி 4 ஆண்டுகளில் ரூ.705 கோடியே 81 லட்சம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்து நிதி ஆண்டுதோறும் தேர்தல் கமிஷனில் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். கொடுத்தவர் யார்? என்று தெரிவிக்காமல், ரூ.20 ஆயிரம்வரை நன்கொடை பெறலாம். அதற்கு மேல் பெற்ற நன்கொடைகளை கொடுத்தவரின் விவரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் கமிஷனில், கடந்த 2012-2013-ம் நிதி ஆண்டில் இருந்து 2015-2016-ம் நிதிஆண்டுவரை தேசிய கட்சிகள் சமர்ப்பித்த நன்கொடை விவரங்களை டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட 4 ஆண்டுகளில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 5 தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.1,070 கோடியே 68 லட்சம் ஆகும்.

பா.ஜனதா முதலிடம்

இவற்றில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நன்கொடை மட்டும் ரூ.956 கோடியே 77 லட்சம் ஆகும். இவற்றில் பா.ஜனதா அதிக நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. அக்கட்சி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.705 கோடியே 81 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது.

காங்கிரஸ்

அதையடுத்து, காங்கிரஸ் கட்சி ரூ.198 கோடியே 16 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் ரூ.50 கோடியே 73 லட்சமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ரூ.1 கோடியே 89 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 18 லட்சமும் நன்கொடை பெற்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சி, எல்லாமே ரூ.20 ஆயிரத்துக்கு கீழ் நன்கொடை பெற்றிருப்பதாக கணக்கு காட்டி இருப்பதால், இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களில், சத்யா எலெக்டோரல் டிரஸ்ட் என்ற நிறுவனம்தான் அதிக அளவாக ரூ.261 கோடி நன்கொடை அளித்துள்ளது. அதையடுத்து, ஜெனரல் எலெக்டோரல் டிரஸ்ட் என்ற நிறுவனம் ரூ.124 கோடி நன்கொடை அளித்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிக நன்கொடை தந்துள்ளன. இடதுசாரி கட்சிகளுக்கு பெரும்பாலும் சங்கங்களிடம் இருந்துதான் நன்கொடை கிடைத்துள்ளது. 

Next Story