அ.தி.மு.க. இரு அணியினர் ஆவணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் -தீபா பேரவை கோரிக்கை


அ.தி.மு.க. இரு அணியினர் ஆவணங்களை   தள்ளுபடி செய்ய வேண்டும் -தீபா பேரவை கோரிக்கை
x
தினத்தந்தி 17 Aug 2017 10:45 PM GMT (Updated: 17 Aug 2017 8:53 PM GMT)

அ.தி.மு.க.வின் இரு அணியினரின் ஆவணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீபா பேரவையினர் தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுடெல்லி,

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன், கடலூர் வெங்கட் ஆகியோர் டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதியை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தனர்.

அதில், அ.தி.மு.க.வின் இரு அணியினரும் போலி ஆவணங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலி ஆவணங்கள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் (அ.தி.மு.க. அம்மா), ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் (அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா) போலி ஆவணங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளனர். அதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன் ஆகிய மூவரும் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு தேர்தல் கமிஷனில் ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளனர். பின்னர் சசிகலா நீக்கப்பட்டதாக அறிவித்தனர். அதன்பிறகு துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனை ஒப்புக்கொண்டனர். தற்போது டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளர் இல்லை என்று சொல்கிறார்கள்.

எது உண்மை?

இதில் எது உண்மை? எது பொய்? என்று தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது. உண்மையான எம்.ஜி.ஆர். தொண்டர்களை கொண்ட இயக்கமாக தீபா தலைமையிலான எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை இயங்கி வருகிறது. எனவே, தேர்தல் கமிஷனில் நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்களின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மற்ற இரு அணிகளின் ஆவணங்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.

மேலும், ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும், சசிகலா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறோம். இவற்றை ஆலோசிப்பதாக தேர்தல் கமிஷனர் தெரிவித்து இருக்கிறார். இதில் எங்களுக்கு பாதகமான முடிவு வந்தால், சுப்ரீம் கோர்ட்டு வரை செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story