‘கர்நாடகா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்


‘கர்நாடகா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வாதம்
x
தினத்தந்தி 17 Aug 2017 11:00 PM GMT (Updated: 17 Aug 2017 8:57 PM GMT)

காவிரி வழக்கில் கர்நாடகா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இதில் கர்நாடகா மற்றும் கேரள அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்தநிலையில், தமிழக அரசின் இறுதிவாதம் 6-வது நாளாக நேற்று நடந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சேகர் நாப்டே, ராகேஷ் திவிவேதி, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் ஆஜரானார்கள்.

தண்ணீர் திறப்பு

விசாரணை துவங்கியதும் வக்கீல் சேகர் நாப்டே, காவிரியில் இருந்து நீர்ப்பங்கீடு குறித்து பல்வேறு கடித போக்குவரத்துகள், அறிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்களை கோர்ட்டுக்கு எடுத்துரைத்தார். அப்போது கர்நாடகா தரப்பு வக்கீல் மோகன் கர்த்தார்க்கி குறுக்கிட்டு, ‘கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக 192 டி.எம்.சி.க்கு அதிகமாக தண்ணீர் அளித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் மட்டுமே குறைவான தண்ணீர் தரமுடிந்தது’ என்று கூறினார்.

சேகர் நாப்டே தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் அதிகமாக மழை பொழியும் போது உபரிநீரை திறந்து விட்டு இப்போது ஏதோ அதிகமாக தண்ணீர் தந்ததாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு பாசனத்துக்காக தண்ணீர் எப்போது மிகவும் அவசியமாக தேவைப்படுகிறதோ அப்போது தண்ணீரை திறப்பது இல்லை என்று கூறினார்.

நம்பிக்கை இல்லை

இதற்கு கர்நாடகா தரப்பில், ‘இதற்கு தான் நாங்கள் மேகதாதுவில் அணையை கட்டி உபரி நீரை தமிழ்நாட்டுக்கு தருகிறோம் என்று கூறுகிறோம். தமிழ்நாடு இதற்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது’ என்று கூறப்பட்டது.

இதற்கு தமிழக அரசு தரப்பில், மூன்றாவது நபரின் கட்டுப்பாட்டில், அதாவது மத்திய அரசு அல்லது கோர்ட்டு நியமிக்கும் ஒழுங்காற்றுக்குழு அல்லது மேலாண்மைக் குழுவின் கட்டுப்பாட்டில் அந்த அணை இருந்தால் நாங்கள் கண்டிப்பாக வரவேற்கிறோம். கர்நாடகாவின் கட்டுப்பாட்டில் அது இருந்தால் எங்களால் ஏற்க முடியாது. கர்நாடகா மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று கூறப்பட்டது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இந்த வழக்கின் மீது வாதங்கள் வரும் செவ்வாய்க் கிழமையன்று தொடரும். 

Next Story