கோசாலையில் 200 பசுக்கள் பசியால் உயிரிழப்பு, சத்தீஷ்கார் பா.ஜனதா தலைவர் கைது


கோசாலையில் 200 பசுக்கள் பசியால் உயிரிழப்பு, சத்தீஷ்கார் பா.ஜனதா தலைவர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2017 8:49 AM GMT (Updated: 20 Aug 2017 8:48 AM GMT)

கோசாலையில் 200 பசுக்கள் பசியால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சத்தீஷ்கார் பா.ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டார்.


ராய்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் பிராந்திய பா.ஜனத தலைவர் ஹரிஷ் வர்மாக்கு சொந்தமான கோசாலை செயல்பட்டு வருகிறது. கோசாலையில் பசுக்கள் பசியாலும், மருத்துவ வசதியின்றியும் தொடர்ந்து இறந்து உள்ளன. 

கோசாலையில் இருக்கும் மாடுகள் அனைத்தும் பசியினால் எழும்பும் தோலுமாகவே காட்சியளிக்கிறது. சகதிக்கு இடையே உயிருக்கு தினமும் பசுக்கள் போராடி உள்ளன. பசியின் காரணமாக 30 பசுக்கள் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்கள் கோசாலையில் பசியினால் கடந்த சில நாட்களாகவே பசுக்கள் உயிரிழந்து வருகின்றன. இதுவரையில் 200 பசுக்கள் உயிரிழந்து உள்ளன. கோசாலை அமைந்து உள்ள பகுதியிலே பசுக்களின் சடலங்கள் புதைக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைவர் ஹரிஷ் வர்மா நடத்திவரும் கோசாலைக்கு அரசு நிதியுதவி வழங்குவதாக கூறப்படுகிறது. பசுக்கள் இறப்பு தொடர்பாக சத்தீஷ்கார் ராஜ்ய கவ் சேவா ஆயோக் அமைப்பு போலீஸில் புகார் செய்துள்ளது.

“வர்மாவின் கோசாலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பி வைத்தோம். அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே பசுக்களின் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

கோசாலை உரிமையாளர் ஹரிஷ் வர்மாவை நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் மீது சத்தீஷ்கார் மாநில விவசாய கால்நடை பாதுகாப்பு சட்டம் -2004 பிரிவு 4 மற்றும் 6-ன் கீழும், விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 11-ன் கீழும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 409-ன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்களின் தகவல்படி பசுக்கள் பசி மற்றும் மருத்துவ வசதியின்றி உயிரிழந்து உள்ளன என தெரியவந்து உள்ளது. ஆனால் கோசாலையில் சுவர் இடிந்து விழுந்ததால்தான் உயிரிழப்பு நேரிட்டது என ஹரிஷ் வர்மா கூறிஉள்ளார். 

மேலும் 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிரிக்கு போராடி வருகிறது. அவைகளின் உடல்நிலையானது மிகவும் மோசமாக காணப்படுகிறது, அவைகளுக்கு சிகிச்சை தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது என டாக்டர் தெரிவித்து உள்ளார். இச்சம்பவத்தை அடுத்து போலீசார் வர்மாவை கைது செய்து உள்ளனர். “கோசாலையில் 220 பசுக்களை பராமரிக்கமுடியும். ஆனால் 650 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள ரூ. 10 லட்சத்தை வழங்கக் கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தபோதிலும் இதுவரை எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை” என்று கூறிஉள்ளார் ஹரிஷ் வர்மா. 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறும்போது, “வர்மாவின் கோசாலையில் கடந்த 3 நாட்களில் 300 பசுக்கள் உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.

Next Story