இந்திய தம்பதியின் விவாகரத்தை வெளிநாட்டு கோர்ட்டு தீர்மானிக்க முடியாது மும்பை ஐகோர்ட்டு உத்தரவு


இந்திய தம்பதியின் விவாகரத்தை வெளிநாட்டு கோர்ட்டு தீர்மானிக்க முடியாது மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2017 10:30 PM GMT (Updated: 20 Aug 2017 9:24 PM GMT)

இந்திய தம்பதியின் விவாகரத்தை வெளிநாட்டு கோர்ட்டு தீர்மானிக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

இந்திய தம்பதியின் விவாகரத்தை வெளிநாட்டு கோர்ட்டு தீர்மானிக்க முடியாது என்று மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

துபாய் தம்பதி

மும்பையை சேர்ந்த ஒருவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் துபாயில் வசித்து வந்தார். இந்த நிலையில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற கணவர் முடிவு செய்தார். இதற்காக அவர் துபாய் கோர்ட்டில் மனு செய்தார். விசாரணை நிறைவில், அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கி துபாய் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் தனக்கும், தனது குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க தனது கணவருக்கு உத்தரவிடுமாறு சம்பந்தப்பட்ட பெண் மும்பை குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், துபாய் கோர்ட்டு ஏற்கனவே விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்து விட்டதாக கூறி மனுவை மும்பை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டு உத்தரவு

இதை எதிர்த்து அந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, அனுஜா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரரும், அவரது கணவரும் துபாயில் வசித்தாலும், அவர்கள் இந்திய குடிமக்களாக தான் உள்ளனர், அவர்களிடம் துபாய் நாட்டு குடியுரிமைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்து திருமண சட்டத்தின் படி அவர்கள் திருமணம் செய்து கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கிய துபாய் கோர்ட்டின் தீர்ப்பு செல்லாது என்று உத்தரவிட்டனர். இதுபோன்ற விவாகரத்து வழக்குகள் வெளிநாட்டு கோர்ட்டின் எல்லைக்கு அப்பாற்பட்டது, இந்த வழக்குகளை அந்த கோர்ட்டுகள் தீர்மானிக்க முடியாது என்றும் உத்தரவிட்டனர்.

எனவே சம்பந்தப்பட்ட பெண் மீண்டும் மும்பை குடும்பநல கோர்ட்டில் முறையிடுமாறு ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்த மாதம் 18–ந் தேதி கணவன்–மனைவி இருவரும் மும்பை குடும்பநல கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story