உத்தரபிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவு


உத்தரபிரதேசத்தில் நடந்த ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உத்தரவு
x
தினத்தந்தி 21 Aug 2017 12:00 AM GMT (Updated: 20 Aug 2017 9:38 PM GMT)

உத்தரபிரதேசத்தில் நடந்த, ரெயில் விபத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் காரணம் என்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் நடந்த, ரெயில் விபத்துக்கு ரெயில்வே ஊழியர்கள் காரணம் என்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டார்.

ரெயில் தடம்புரண்டது

ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டது. 14 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இந்த விபத்தில் 23 பேர் பலியாயினர். மேலும் 156 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 26 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பராமரிப்பு பணி

விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வந்தது குறித்து உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்காததே காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து பற்றி ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு டுவிட்டர் பதிவுகளில் கூறியதாவது:–

உத்கால் எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி வேகமாக நடந்து வருகிறது. சேதமடைந்த தண்டவாளங்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து குறித்து தனிப்பட்ட முறையில் நிலைமையை தொடர்ந்து நான் கண்காணித்து வருகிறேன்.

ரெயில்வே வாரியத்தின் செயல்பாட்டில் எந்த மெத்தனத்திற்கும் இடம் கிடையாது. விசாரணையின் முடிவில் விபத்து நடந்ததற்கு மனித தவறுதான் காரணம் என்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இன்று விசாரணை

ரெயில்வே வாரியத்தின்(போக்குவரத்து) உறுப்பினர் முகமது ஜாம்ஷெட் கூறும்போது, ‘‘விபத்து நடந்த இடத்தில் ரெயில்வே வாரிய பாதுகாப்பு பிரிவின் ஆணையர் நாளை(இன்று) விசாரணை நடத்துவார். விபத்து நடந்த இடத்தில் ரெயில் தண்டவாள பராமரிப்பு நடந்து கொண்டிருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் ரெயில் தடம்புரண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கிடைத்துள்ள ஒரு ஆடியோ பதிவு பற்றியும் விசாரிக்கப்படும். விபத்து நடந்த இடத்தில் பழுது பார்ப்பதற்குரிய கருவிகள் கிடந்துள்ளன. விபத்துக்கு ரெயில்வே ஊழியர்கள்தான் காரணம் என்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 586 ரெயில் விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 53 சதவீத விபத்துகள் தடம்புரண்டதன் காரணமாக நடந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

எனவே ரெயில்வே வாரியம் இதில் மிகுந்த கவனமாக செயல்படவேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story