ஊழல் வழக்கில் சிறை செல்வதை தவிர்க்கவே பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்தார் லாலுபிரசாத் குற்றச்சாட்டு


ஊழல் வழக்கில் சிறை செல்வதை தவிர்க்கவே பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்தார் லாலுபிரசாத் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Aug 2017 11:00 PM GMT (Updated: 20 Aug 2017 10:02 PM GMT)

ஊழல் வழக்கில் சிறை செல்வதை தவிர்க்கவே பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்துள்ளார் என்று லாலுபிரசாத் யாதவ் கூறினார்.

பாட்னா,

ஊழல் வழக்கில் சிறை செல்வதை தவிர்க்கவே பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்துள்ளார் என்று லாலுபிரசாத் யாதவ் கூறினார்.

ராஷ்டிரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரூ.11 ஆயிரம் கோடி

பீகார் மாநில அரசு கணக்கில் வங்கிகளில் உள்ள பணம் முறைகேடாக எடுக்கப்பட்டு, பாகல்பூரில் பெண்களுக்காக செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பான ஸ்ரீஜன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. 2011–ம் ஆண்டு கணக்கு தணிக்கை அதிகாரி இதில் ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன்பேரில் முதல்–மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2013–ம் ஆண்டு ரிசர்வ் வங்கி பீகார் அரசுக்கு இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தும்படி கடிதம் எழுதியது. பாகல்பூர் கலெக்டர் இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

திசைதிருப்புகிறார்

இதில் தொடர்புடைய கறைபடிந்த அதிகாரி ஜெய்ஸ்ரீ தாகூர் பாகல்பூர் அல்லது பாங்காவில் நீண்டகாலமாக பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் மீது நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்சினை வெளியான பின்னர் கண்துடைப்புக்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த 8–ந் தேதி தான் இந்த ஸ்ரீஜன் ஊழல் பற்றி தனக்கு தெரியவந்ததாகவும், 9–ந் தேதி இந்த ஊழல் பற்றி தானே முதலாவதாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதுடன், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி மக்களை திசைதிருப்ப நினைக்கிறார்.

சிறைக்கு செல்ல...

ரிசர்வ் வங்கி விதிகளின்படி ரூ.30 கோடிக்கு அதிகமான ஊழல் குறித்து சி.பி.ஐ. தான் விசாரணை நடத்த வேண்டும் என்பது நிதிஷ்குமாருக்கும் தெரியும். சி.பி.ஐ. இந்த வழக்கை சரியான முறையில் விசாரணை நடத்தினால் நிதிஷ்குமார் சிறைக்கு செல்ல வேண்டியது வரும். இந்த பயம் காரணமாகவே அவர் ஜூலை 26–ந் தேதி மகா கூட்டணியை குழிதோண்டி புதைத்துவிட்டு, பா.ஜனதாவுடன் கைகோர்த்து 2 மணி நேரத்தில் புதிய அரசை அமைத்து இருக்கிறார்.

கால்நடை தீவன முறைகேட்டில் முதல்–மந்திரி மற்றும் நிதித்துறை பொறுப்பு வகித்த அடிப்படையில் எப்படி என் மீது வழக்கு போடப்பட்டதோ, அதேபோல 2006–2013 காலகட்டத்தில் முதல்–மந்திரியாக இருந்த நிதிஷ்குமார், நிதித்துறையை கவனித்த துணை முதல்–மந்திரி சுஷில்குமார் மோடி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த ஊழலை வெளிப்படுத்தும் வகையில் ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறினார்.

--–

36 பாயிண்ட் பார் ஆல்


Next Story