இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி


இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
x
தினத்தந்தி 21 Aug 2017 2:17 PM GMT (Updated: 21 Aug 2017 2:17 PM GMT)

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு பிஜு ஜனதா தளம் எம்.பி. ஒடிய மொழியில் பதில் கடிதம் அனுப்பிஉள்ளார்.


புதுடெல்லி,


மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகஸ்ட் 11-ம் தேதி பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ததகதா சத்பதிக்கு 'இந்தியா 2022' பார்வை என்ற மாவட்ட அளவிலான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள கடிதம் எழுதியிருந்தார். இந்தியில் மட்டும் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தை தன்னுடைய டுவிட்டரில் டுவிட் செய்த ததகதா சத்பதி, “மத்திய மந்திரிகள் ஏன் இந்தி மொழி அல்லாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்வது ஏன்? இது பிற மொழிகள் மீதான தாக்குதல்கள் இல்லையா?” என கேள்வியை எழுப்பினார்.

 பின்னர் தன்னால் இந்தி கடிதத்தை புரிந்துக் கொள்ள இயலாமையை வெளிப்படுத்தும் விதமாக ஒடிய மொழியில் பதில் கடிதம் எழுதினார். அதனையும் டுவிட்டரில் டுவிட் செய்து உள்ளார். மத்திய மந்திரியின் இந்தி கடிதத்திற்கு ஒடிய மொழியில் எம்.பி. பதில் கடிதம் எழுதியது மீண்டும் இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தை தொடர செய்து உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இந்தி திணிப்பிற்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் ஒடியாவில் இருந்து எம்.பி. தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார். 
  
இவ்விவகாரம் தொடர்பாக சத்பதி இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்து உள்ள பேட்டியில், “நான் அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிப்பவன். ஒடியா, பெங்காலி மற்றும் பிற மொழிகளும் மிகவும் அழகானவை என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்,” என்றார். 

தோமருக்கு ஒடிய மொழியில் சத்பதி எழுதி உள்ள பதில் கடிதத்தில், இந்த கடிதத்தில் எழுதி உள்ளது எதுவும் எனக்கு தெரியது, எனக்கு இந்தி மொழி புரியாது. எங்களுடைய மாநிலமானது சி பட்டியலின் கீழ் உள்ளது, எனவே எங்களுக்கு அனுப்பும் கடிதங்களை ஆங்கிலம் அல்லது ஒடிய மொழியில் அனுப்புங்கள்,” என கூறிஉள்ளார். 

அலுவலக மொழிகள் விதிகளின்படி மத்திய அரசிடம் இருந்து சி பட்டியலின் கீழ் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அல்லது இந்த மாநிலங்களில் உள்ள அலுவலகம் (மத்திய அரசு அலுவலகம் தவிர்த்து) அல்லது தனிநபருக்கு எழுதும் கடிதமானது ஆங்கிலத்தில் இருக்கவேண்டும். சத்பதி மேலும் கூறுகையில் எனக்கு இந்தி மொழியை நன்றாகவே தெரியும், எனக்கு பிரதமர் மோடியிடம் இருந்து ஆங்கில மொழியில் கடிதங்கள் வந்து உள்ளது. ஆனால் இப்படி வலுக்கட்டாயமாக திணிப்பதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என கூறிஉள்ளார். 


Next Story