முத்தலாக் சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது


முத்தலாக் சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது
x
தினத்தந்தி 23 Aug 2017 12:00 AM GMT (Updated: 22 Aug 2017 9:03 PM GMT)

முத்தலாக் நடைமுறை சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்று உள்ளார். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று அவர் கூறி இருக்கிறார்.

புதுடெல்லி,

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது.
இதுபற்றி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பதிவில், “முத்தலாக்கின் மீது சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த தீர்ப் பின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு சமத்துவம் கிடைத்துள்ளது. மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப் பதில் இது ஒரு பலமான அளவீடு ஆகும்” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், “முத்தலாக் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. இதில் நீதிக்காக போராடிய பெண்களை வாழ்த்துகிறேன்” என்றார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, “முஸ்லிம் பெண்களுக்கு சமத்துவம் அளிப்பதிலும், அவர்களுக்கு சுய மரியாதை கிடைப்பதிலும் புதிய சகாப்தம் தொடங்கி இருக்கிறது. இந்த வழக்கில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முஸ்லிம் பெண்கள் மீதான கருத்தை உரிய முறையில் கோர்ட்டில் தெரிவித்தது. சமத்துவ உரிமைக்கும், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கும் கிடைத்த வெற்றி இதுவாகும்” என்றார்.
காங்கிரசின் மூத்த தலை வரும், பிரபல வக்கீலுமான கபில்சிபல் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் கோர்ட் டின் தீர்ப்பு தனிப்பட்ட சட்டங்களை பாதுகாக்கி றது. அதே நேரம் மும்முறை தலாக் கூறும் பழக்கத்தை தடுத்து உள்ளது” என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறும்போது, முத்தலாக்கிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஆக்கப்பூர்வமானதாகவும், முற்போக்கானதாகவும் அமைந்துள்ள இந்த தீர்ப்பு உரிமைக்காக குரல்கொடுப்போர் அனைவராலும் வரவேற்க கூடியதாகும் என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் வரவேற்கிறது. இந்த தீர்ப்பில் பெரும்பான்மை, சிறுபான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரத்தை முழுமையாக தெரிந்துகொண்டு பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கூறும்போது, “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த தீர்ப்பு ஒரு மைல்கல் ஆகும். இதன் மூலம் நாட்டின் மதச்சார்பற்ற நிலை வலுவடையும்” என்று குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்டவாரியம் மற்றும் இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் ஆகியவை கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பெண்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த வெற்றி இது. அதை விட இஸ்லாமிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். எப்போதாவது இதுபோன்ற தீர்ப்பு வரும் என்றே எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்று குறிப்பிட்டன.

முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்டவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த, பர்ஹா பயஸ், ஷகியா சுமான், நூர்ஜகான் ஆகியோர் கூறுகையில், “மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறது. இதனால் பெரிய நிவாரணமும் கிடைத்துள்ளது. எனினும் இது பாதி வெற்றிதான். கோர்ட்டு உத்தரவின்படி சட்டம் இயற்றப்பட்டு அதன் கீழ் தண்டனை வழங்கும்போதுதான் இதில் முழு வெற்றி பெற்றதாக கருத முடியும்” என்றனர்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி போபால் நகரில் கூடி விரிவாக விவாதிக்கும் என்று அறிவித்து உள்ளது.

Next Story