விபத்துக்கள் காரணமாக மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ராஜினாமா கடிதம் வழங்கினார்


விபத்துக்கள் காரணமாக மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ராஜினாமா கடிதம் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Aug 2017 10:01 AM GMT (Updated: 23 Aug 2017 10:01 AM GMT)

ரெயில் விபத்துக்கள் காரணமாக மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கி உள்ளார்.



புதுடெல்லி,

சமீபத்திய ரெயில்வே விபத்துக்களுக்கு பொறுப்பு ஏற்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார். 

சுரேஷ் பிரபு டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “பிரதமர் மோடியை நான் சந்தித்து முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். பிரதமர் மோடி என்னை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார்,” என குறிப்பிட்டு உள்ளார். மூன்று ஆண்டுகளாக ரெயில்வே மந்திரியாக பணியாற்றி வருகின்றேன், ரெயில்வே நலனுக்காக என்னுடைய ரத்தம் மற்றும் வியர்வையை அர்ப்பணித்திருக்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் ரெயில்வேயின் அனைத்து நிலைகளிலும் பல ஆண்டுகளாக காணப்பட்ட அலட்சியத்தை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து உள்ளேன். இப்போது ரெயில்வே பிரதமர் மோடியின் கனவுபடி திறனாகவும், நவீனமாகவும் காணப்படுகிறது.

 ரெயில்வே இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும் சுரேஷ் பிரபு குறிப்பிட்டு உள்ளார். 

ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் 19-ம் தேதி முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. விபத்தில் இறந்தவர்கள் 24 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம் அடைந்தனர். இன்றும் டெல்லியை நோக்கி சென்ற கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசத்தில் தடம் புரண்டது. 5 நாட்களில் நடைபெறும் இரண்டாவது ரெயில் விபத்து இதுவாகும், இந்நிலையில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளார். 

Next Story