இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு


இதர பிற்படுத்தப்பட்டோர்   இடஒதுக்கீடு வருமான உச்சவரம்பு  ரூ.8 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 14 Sep 2017 12:00 AM GMT (Updated: 13 Sep 2017 7:50 PM GMT)

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான ‘கிரீமி லேயர்’ வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகை பெறுவதற்கான ‘கிரீமி லேயர்’ வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிரீமி லேயர்

மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், இந்த சலுகையை பெற பொருளாதார அளவுகோலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால், அவர்கள் ‘கிரீமி லேயர்’ என்ற வரையறைக்குள் வந்து விடுவார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு மேற்கண்ட 27 சதவீத இட ஒதுக்கீடு சலுகை கிடைக்காது.

1993-ம் ஆண்டு இந்த வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. 2004-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும், 2008-ம் ஆண்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரமாகவும், 2013-ம் ஆண்டு ரூ.6 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

ரூ.8 லட்சமாக உயர்வு

இந்த வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்துமாறு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சிபாரிசு செய்திருந்தது. மத்திய மந்திரிசபையும் இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக கடந்த மாதம் 23-ந் தேதி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

இந்நிலையில், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கான ‘கிரீமி லேயர்’ ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி, மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

யாருக்கு கிடைக்காது?

இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. சமூக நீதியை உறுதி செய்யும் மத்திய அரசின் முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், பெற்றோரின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் மற்றும் அதற்கு மேல், தொடர்ந்து 3 ஆண்டுகள் இருந்தால், அவர்கள் ‘கிரீமி லேயர்’ பிரிவினராக கருதப்படுவார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு சலுகை கிடைக்காது. ரூ.8 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் இருந்தால்தான், சலுகையை பெற முடியும்.

‘கிரீமி லேயர்’ வருமான உச்சவரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


Next Story