சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி செல்போனில் முத்தலாக் கூறிவிட்டு மறுதினமே வேறு பெண்ணுடன் திருமணம்


சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி செல்போனில் முத்தலாக் கூறிவிட்டு மறுதினமே வேறு பெண்ணுடன் திருமணம்
x
தினத்தந்தி 25 Sep 2017 1:41 PM GMT (Updated: 25 Sep 2017 1:40 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி ஒருவர் மனைவிக்கு செல்போனில் முத்தலாக் கூறிவிட்டு மறுதினமே மற்றொரு பெண்ணை திருமணம் செய்த சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது.



ஜோத்பூர்,

திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது. முத்தலாக் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் கோர்ட்டு அறிவுறுத்தியது. 

சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒருவர் மனைவிக்கு செல்போனில் முத்தலாக் கூறிவிட்டு மறுதினமே மற்றொரு பெண்ணை திருமணம் செய்த சம்பவம் வெளியே தெரியவந்து உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பேசுகையில் என்னுடைய கணவர் செப்டம்பர் 18-ம் தேதி செல்போனில் முத்தலாக் கூறி என்னை விவகாரத்து செய்துவிட்டார், எனுக்கு தலாக் கூறிய மறுதினமே மற்றொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் எனவும் கூறிஉள்ளார். 

ஜோத்பூரின் மத்தானியாவை சேர்ந்த அப்சானாவிற்கும்(26) முன்னாவிற்கும்(30) எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து உள்ளது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. திருமணம் ஆனது முதல் வரதட்சணை கேட்டு அப்சானாவை முன்னா கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. அப்சானா வரதட்சணை வாங்கி வராத காரணத்தினால் கடந்த 2015-ல் ஒருமுறை அவரது மீது மண்ணென்னை ஊற்றி முன்னா எரித்துக் கொல்லவும் முயற்சி செய்துள்ளார் என தெரியவந்து உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக முன்னா மீது மத்தானியா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் அப்சானாவிடம் தொலைபேசியில் பேசிய முன்னா முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அப்சானா மற்றும் அவருடைய குடும்பத்தார் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். முன்னா மற்றும் அவரது பெற்றோர் மீது அப்சானா ஜோத்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி இதுபோன்ற சம்பவம் நடந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story