கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு


கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2017 11:15 PM GMT (Updated: 4 Oct 2017 9:23 PM GMT)

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

புதுடெல்லி,

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது கடந்த 2007–ம் ஆண்டு ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ.350 கோடி அளவுக்கு வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதில் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாமல், இந்த சம்மனை தள்ளுபடி செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் இந்தியாவை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அவரை தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஜூன் 16–ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை (லுக் அவுட் நோட்டீஸ்) வெளியிட்டது. அந்த தேடல் அறிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை உருவானது.

சி.பி.ஐ. தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், ‘‘கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ. வெளியிட்ட தேடல் அறிக்கை அவர் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுப்பதற்கும், அவர் சி.பி.ஐ. விசாரணையில் பங்கேற்கும் நோக்கத்திலும்தான் வெளியிடப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள தன்னுடைய கணக்குகளை மூடிவிட்டு அந்த தொகையை மற்ற கணக்குகளில் மாற்றுவதற்கு மட்டுமே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்கிறார். வெளிநாடு செல்ல அனுமதித்தால் சாட்சியங்களை கலைக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால், அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

மேலும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் வைத்துள்ள வங்கி கணக்குகள் மற்றும் இந்த விசாரணையின் போது கிடைத்த முக்கியமான ஆவணங்கள், சி.பி.ஐ. விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்த அறிக்கையை ‘சீல்’ வைத்த உறையில் வைத்து தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் கபில் சிபல், சி.பி.ஐ. தரப்பில் ‘சீல்’ வைத்த உறையில் வைத்து தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் நகலை கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்காத பட்சத்தில், கோர்ட்டு அவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

அதற்கு நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதில் ஒருவருடைய பெயர் இருந்தால் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற தகுதியை அடைகிறார் என்று கூறினார்கள்.

அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அவர் தொடர்புடைய ஆவணங்களின் நகல்களை வழங்காமல் அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை அமைப்பு விசாரணையை தொடர முடியுமா? என்பது குறித்து அறிந்து கொள்ள கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோர்ட்டுக்கு உதவ வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து மனுக்களையும் வரும் 9–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், அதுவரை கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து சி.பி.ஐ. வெளியிட்ட அறிக்கை அமலில் இருக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் அவர் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையே ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ய குளோபல் கம்யூனிகே‌ஷன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுக் கொடுத்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அவர் சார்பில் அவரது வக்கீல் அருண் நடராஜன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.


Next Story