வன்முறையை தூண்டியது, ஆதரவாளர்களுக்கு ‘மேப்’ தயார் செய்து கொடுத்தது நான்தான் ஹனிபிரீத் வாக்குமூலம்


வன்முறையை தூண்டியது, ஆதரவாளர்களுக்கு ‘மேப்’ தயார் செய்து கொடுத்தது நான்தான் ஹனிபிரீத் வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Oct 2017 9:55 AM GMT (Updated: 11 Oct 2017 9:55 AM GMT)

வன்முறையை தூண்டியதும், ஆதரவாளர்களுக்கு ‘மேப்’ தயார் செய்து கொடுத்ததும் நான்தான் என ஹனிபிரீத் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.


சண்டிகார், 

 இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ரோதக் மாவட்டத்தில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாலியல் பலாத்கார சாமியார் குர்மீத் சிங் குற்றவாளி என ஆகஸ்ட் 25-ம் தேதி சிபிஐ நீதிமன்றம் அறிவித்ததும் அரியானா மற்றும் பஞ்சாப்பில் வன்முறை வெடித்தது. அரியானாவில் வன்முறை வெடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இரு மாநிலங்களிலும் 200-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். வன்முறையை தூண்டிவிட்டதில் பலாத்கார சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு முக்கிய பங்கு உள்ளது எனவும் அவர் போலீஸ் காவலில் இருந்து சாமியார் குர்மீத் சிங்கை காப்பாற்ற முயற்சி செய்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இச்சம்பவங்களை அடுத்து ஹனி பிரீத் தலைமறைவாகினார், முன்ஜாமீன் பெறவும் முயற்சி செய்தார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இதனையடுத்து கடந்த மூன்றாம் தேதி ஹனி பிரீத்தை போலீஸ் கைது செய்தது.

இரு மாநிலங்களிலும் வன்முறையை தூண்ட 1.25 கோடி ஹனிபிரீத் சிங் செலவிட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இப்போது நான்தான் வன்முறையை தூண்டினேன், ஆதரவாளர்களுக்கு எப்படி ஆப்ரேஷனை முன்னெடுப்பது என ‘மேப்’ தயார் செய்து கொடுத்தேன் என ஹனிபிரீத் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வன்முறையை தூண்ட தேரா ஆதரவாளர்களுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது, அதற்கான திட்டமிடுதலும் நடந்து உள்ளது. ஹனி பிரீத்தை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வரும் அம்மாநில சிறப்பு விசாரணை குழு, விசாரணையின் போது முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்று உள்ளது என கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. வன்முறையை எங்கிருந்து தொடங்குவது, என்ன செய்வது என்பது தொடர்பாகவும் ‘மேப்’ தயார் செய்யப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பான ஆவணங்கள் ஹனி பிரீத்தின் லேப்-டாப்பில் உள்ளது எனவும் அதனை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சாமியார் குர்மீத் சிங் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து தேராவிற்கு சொந்தமான கணக்கில் வராத பணம் எங்கு மறைத்து வைக்கப்பட்டு உள்ளது என்பதும் ஹனி பிரீத்திற்குதான் தெரியும் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story