பெங்களூர் சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில் குளிக்கும் கடல் கன்னி


பெங்களூர் சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில் குளிக்கும் கடல் கன்னி
x
தினத்தந்தி 13 Oct 2017 7:13 AM GMT (Updated: 13 Oct 2017 7:13 AM GMT)

பெங்களூர் சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில் கடல் கன்னி'போன்ற வேடமணிந்த பெண் குளிக்கச் செல்வதை போன்று டிராமா நடத்தப்பட்டது.


பெங்களூர்

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால், சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் உள்ள குழிகளை 15 நாட்களில் மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

சாலை பள்ளங்களால் கார்கள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. சாலை பள்ளங்களை மூட அரசு துரிதம் காட்டவில்லை என்பதால் பெங்களூரில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரின் மையப்பகுதியான கப்பன் பார்க் ஜக்ஷனும் சாலை பள்ளத்தில் இருந்து தப்பாத ஏரியாதான். இங்கு ஓவிய கலைஞர்கள் இணைந்து, சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் 'கடல் கன்னி' போன்ற வேடமணிந்த பெண் குளிக்கச் செல்வதை போன்று டிராமா நடத்தப்பட்டது. அரசின் கவனத்தை ஈர்க்க இதுபோல பல்வேறு வகையான போராட்டங்கள் பெங்களூரில் நடக்கின்றன.

அதேநேரம், கர்நாடக முதல்வர் சித்தராமையாவோ, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "பெங்களூரில் சாலை பள்ளங்களால் 4 பேர் உயிரிழந்துள்ளனரே" என்ற நிருபர்கள் கேள்விக்கு, "சாலை பள்ளங்களால் இல்லை, சாலை விபத்துகளால் அவர்கள் இறந்தனர்" என்று சித்தராமையாய பதிலளித்தார்.

பெங்களூர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் இன்னும் ஒருபடி மேலேபோய், ஆங்கில ஊடங்கள், பெங்களூரின் நற்பெயரை கெடுக்க இதுபோன்ற பிரசாரங்கள் நடத்துவதாக தெரிவித்தார். 

Next Story