ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்நாத் சிங்கை புறக்கணித்து, போலீசார் விடுப்பில் சென்றனர்


ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்நாத் சிங்கை புறக்கணித்து, போலீசார் விடுப்பில் சென்றனர்
x
தினத்தந்தி 17 Oct 2017 11:30 PM GMT (Updated: 17 Oct 2017 8:43 PM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கின் அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்காமல் புறக்கணித்து, போலீசார் விடுப்பில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள ஜோத்பூரில் நேற்று முன்தினம், உளவுத்துறை போலீசாருக்கான மண்டல பயிற்சி மையம் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில், பங்கேற்க வந்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்க ஏற்பாடு ஆனது.

ஆனால் இதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த போலீசார் உள்பட 250 போலீசார் திடீரென மொத்தமாக ஒரு நாள் விடுப்பில் சென்றனர். இதனால் வேறு போலீசாரைக் கொண்டு ராஜ்நாத் சிங்குக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கி சமாளித்தனர்.

இருப்பினும் மத்திய உள்துறை மந்திரிக்கு வழங்கப்படவிருந்த அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்க வேண்டிய கடமையை உதறித்தள்ளிவிட்டு போலீசார் ஓட்டு மொத்தமாக விடுப்பில் சென்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த மாநிலத்தில் போலீசாருக்கு தற்போது மாதம் ரூ.24 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிற நிலையில், இதை ரூ.19 ஆயிரம் ஆக குறைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதே, இந்த சம்பவத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இது பற்றிய தகவல்களை ஜோத்பூர் போலீஸ் கமி‌ஷனர் அசோக் ரத்தோர் நேற்று வெளியிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘ முன் அனுமதி பெறாமல், போலீசார் திடீர் விடுப்பில் சென்றது, ஒழுக்கக்கேடு ஆகும். இது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உகந்தது ஆகும்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஜோத்பூர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி., எம்.எல். லத்தார் வந்தபோது, அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை வழங்க மறுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

மற்றொரு சம்பவத்தில், ஜெய்ப்பூர் சிவில் லைன்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில், பணியமர்த்தப்பட்டிருந்த 10 போலீசார், சம்பள குறைப்புபற்றிய தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த சக போலீசாரின் இடமாற்றத்தை கண்டித்து மொட்டை அடித்துக்கொண்டு, பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீஸ் டி.ஜி.பி., அஜித் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘‘ எந்தவொரு ஒழுக்கமீறலையும் மன்னிக்க முடியாது. சம்பள வெட்டு தொடர்பாக வதந்திகள்தான் பரவி வருகின்றன. எங்கள் கருத்தை நாங்கள் அரசிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் கண்ணியக்குறைவான செயல்களில் போலீசார் ஈடுபடக்கூடாது’’ என்று குறிப்பிட்டார்.


Next Story