ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் பிரதமர் மோடி பேச்சு


ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2017 12:00 AM GMT (Updated: 17 Oct 2017 8:56 PM GMT)

ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாட்டிலேயே முதல் முறையாக அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–

ஆயுர்வேதம் இந்திய மருத்துவத்தில் வலிமை வாய்ந்த ஒன்றாகும். இத்துறையில் பணியாற்றுவோர் அதற்கு மீண்டும் புத்துயிர் அளிக்கவேண்டும். உடனடியாக நிவாரணம் அளிக்கும் ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ஆயுர்வேத மருந்துகளை இத்துறையில் இருப்போர் தயாரிக்கவேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கும் ஆயுர்வேத மருத்துவ முறையை பலப்படுத்தும் சமூக பொறுப்பு இருக்கிறது. எனவே அவர்களும் இதற்கு நிதி உதவி செய்யவேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக நாம் தொழில் நுட்பத்துறையில் புரட்சி ஏற்பட்டு இருப்பதை காண்கிறோம். தற்போது ஆயுர்வேத மருத்துவம் மூலம் சுகாதார துறையில் புரட்சியை ஏற்படுத்தும் தருணம் வந்துவிட்டது. எனவே ஆயுர்வேதத்தை நாம் வலுப்படுத்துவோம். அதற்கு புத்துயிர் அளிப்போம்.

நாடு அன்னியர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தின் பலத்தை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகும் கூட ஆயுர்வேதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

தற்போது மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவ முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாட்டில் மாவட்டம் தோறும் ஆயுர்வேதம் தொடர்பான ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும்.

இன்று உலகம் முழுவதும் மக்கள் சிறந்த உடல் நலத்தையும், ஆரோக்கியத்தையும் நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை உலகம் அறியச் செய்திடவேண்டும்.

அதனால் ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான பாடத்திட்டம், மருத்துவ சிகிச்சை முறைகளில் சிறந்த வழிகாட்டுதல்களும் தேவை. அதற்காக ஆங்கில மருத்துவத்தை வீழ்த்தவேண்டும் என்று கூறவில்லை. மத்திய அரசு அனைத்து வித மருத்துவ சிகிச்சை முறைகளையும் மதிக்கிறது.

ஆயுஷ் மற்றும் வேளாண் துறை அமைச்சகங்கள் மருத்துவ தாவரங்களை விவசாயிகள் தங்களது வயல்களில் பயிரிட வழிகாட்டி வருகிறது. இதனால் அவர்களால் சிறந்த வருவாயும்பெற முடியும். 2022–ம் ஆண்டில் இந்தியா தனது 75–வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் விவசாயிகளுக்கு இதில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story