ராணுவ வீரர்களுக்கான சேட்டிலைட் அலைபேசி கட்டணத்தை குறைத்தது மத்திய அரசு


ராணுவ வீரர்களுக்கான சேட்டிலைட் அலைபேசி கட்டணத்தை குறைத்தது மத்திய அரசு
x
தினத்தந்தி 18 Oct 2017 1:09 PM GMT (Updated: 18 Oct 2017 1:08 PM GMT)

ராணுவ வீரர்களுக்கு தீபாவளி பரிசளிக்கும் வகையில் சேட்டிலைட் அலைபேசி கட்டணத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியா - சீனா மற்றும் இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில்  பாதுகாப்பு பணியில் மத்திய துணை ராணுவத்தினர், எல்லை பாதுகாப்பு படையினர்இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர். மிகவும் தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் இவர்கள் குடும்பத்தாருடன் அவ்வப்போது தொடர்புகொண்டு பேச கைபேசி சிக்னல் கிடக்காததால் மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் அளித்துவரும் DSPT எனப்படும் செயற்கோள் (சேட்டிலைட்) அழைப்பின் வழியாக பேசி வருகின்றனர். 

இந்த சேவையை பெறுவதற்கு மாத வாடகையாக 500 ரூபாயும், அழைப்பு கட்டணமாக நிமிடம் ஒன்றுக்கு 5 ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில், மாத வாடகை கட்டணம் ஏதுமின்றி, நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தங்களது குடும்பத்தாருடன் பேசும் சலுகையை மத்திய அரசு இவர்களுக்கு அளித்துள்ளது. இந்த சலுகை தீபாவளி தினமான நாளை (19-ம் தேதி) முதல் அமலுக்கு வரும் என மத்திய தொலைத்தொடர்பு மந்திரி மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Next Story