மராட்டிய மாநிலத்தில் அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு


மராட்டிய மாநிலத்தில் அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 2-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2017 2:15 PM GMT (Updated: 18 Oct 2017 2:14 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி அரசு பேருந்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது.

மும்பை,

நாட்டிலேயே மிகப்பெரும் அரசு போக்குவரத்து கழகமாக திகழும் மராட்டிய அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 18 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் இயங்கும் இந்த பேருந்துகளில்  ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

அரசு பஸ் சேவையை தினசரி 60 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால் மாநில அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து போராட்டத்தில் குதிக்க போவதாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே போக்குவரத்து தொழிற்சங்க தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன.

இதனால் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. மராட்டியத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை நேற்று தொடங்கியது. தீபாவளியை சொந்த ஊரில் சென்று கொண்டாடுவதற்காக ஏராளமானவர்கள் அரசு பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர்கள் பஸ் நிலையங்களில் திரண்டனர்.கடைசி நேரத்தில் பஸ்கள் ஓடாதது தெரியவந்ததால் எப்படி ஊருக்கு செல்வது என்பது தெரியாமல் திண்டாடினார்கள். இரவு பொழுதை பஸ் நிலையங்களிலேயே கழிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் வந்தவர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில், இந்த போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இதனால், பயணிகள் இன்றும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த வேலை நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்த மராட்டிய அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் மிலிண்ட் பண்ட், “ போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்று நேற்று மாலையே அனைத்து டெப்போக்களுக்கும் நாங்கள் நோட்டீஸ் விடுத்துவிட்டோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடவில்லை. தற்போது ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார். 

Next Story