மராட்டியத்தில் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: பயணிகள் அவதி


மராட்டியத்தில் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நீடிப்பு: பயணிகள் அவதி
x
தினத்தந்தி 19 Oct 2017 3:04 AM GMT (Updated: 19 Oct 2017 3:03 AM GMT)

மராட்டியத்தில் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மும்பை,

மராட்டியம் முழுவதும் கடந்த 16–ந்தேதி இரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர். 7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த பஸ்களும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் மாநிலத்தில் அனைத்து இடங்களிலும் பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் திரண்ட பயணிகள் பரிதவித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் பலர் விடிய, விடிய பஸ் நிலையங்களிலேயே பொழுதை கழித்தனர்.இந்தநிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3–வது நாளாக இன்றும் நீடிக்கிறது.  ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.பஸ்கள் ஓடாததால் மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஊரக பகுதிகளை சேர்ந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் திட்டமிட்டபடி பயணங்களை மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.

போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று மாநில அரசு எச்சரித்தது.இருப்பினும் போக்குவரத்து ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இந்தநிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் 2 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

Next Story