ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதிலடி


ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை: அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதிலடி
x
தினத்தந்தி 19 Oct 2017 5:58 AM GMT (Updated: 19 Oct 2017 5:58 AM GMT)

ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அமித்ஷாவுக்கு பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இடதுசாரிகளால் பா.ஜ.க.வினர் தொடர்ந்து கொல்லப்படுவதாகக் கூறியும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் பா.ஜ.க.வினர் ஜன் ரக் ஷா யாத்திரையை நடத்தினர். இந்த யாத்திரையை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 3-ஆம் தேதி கண்ணூரில் தொடங்கிவைத்தார்.

இந்த யாத்திரையின் நிறைவு விழா கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது,கேரளாவில் ஆளும் இடது சாரி அரசாங்கத்தையும் முதல் மந்திரி பினராயி விஜயனையும் கடுமையாக விமர்சித்தார்.  அமித்ஷா கூறியதாவது:- “கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆட்சி அமையும் போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். 

இடதுசாரி தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது முதல் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல் மந்திரி பினராயி விஜயன் பொறுப்பேற்க தயாரா. அரசியலில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்கள் குறுகிய காலத்தில் இடதுசாரிகளை கேரளாவில் இருந்து தூக்கியெறியும் நிலை வெகு தூரத்தில் இல்லை.இடதுசாரிகளான நீங்கள் எங்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறீர்கள். எங்களுடன் மோதவிரும்பினால், வளர்ச்சி மற்றும் சித்தாந்த ரீதியில் முடிந்தால் மோதுங்கள்” என்று பேசி இருந்தார். 

அமித்ஷாவின் மேற்கண்ட பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஆர்.எஸ்.எஸ், பாஜகவிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:- “  பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் எந்த மாநிலமும் வளர்ச்சி குறியீட்டில் கேரளா பெற்றுள்ள சர்வதேச தரத்தை எட்டவில்லை. கேரளாவோடு ஒப்பிடும் அளவுக்கு கூட இல்லை. "கொலை அரசியல்" மற்றும் "தோல்வியடைந்த யாத்ரா" மேற்கொண்ட பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் இடம் இருந்து கேரளா, கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. மதச்சார்பற்ற கொள்கைகளால் எனது இதயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா வெறுப்பு மற்றும் மத சித்தாந்தங்களை மட்டுமே கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story