மிரட்டி வசூலிக்கப்படும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் மாவோயிஸ்ட் குடும்பங்கள்


மிரட்டி வசூலிக்கப்படும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் மாவோயிஸ்ட் குடும்பங்கள்
x
தினத்தந்தி 19 Oct 2017 10:45 PM GMT (Updated: 19 Oct 2017 9:11 PM GMT)

பீகார் மற்றும் ஜார்கண்டில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்குள்ள 2 முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களின்

பாட்னா,

 சொகுசு வாழ்க்கை பற்றி பீகார் போலீசின் சிறப்பு அதிரடிப்படை தயாரித்த உளவு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒருவர் பெயர் சந்தீப் யாதவ். அவர், பீகார்–ஜார்கண்ட் சிறப்பு பகுதி குழுவின் பொறுப்பாளராக இருக்கிறார். 88 வழக்குகளில் தேடப்பட்டு வரும் அவரது தலைக்கு ரூ.5 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவருடைய மூத்த மகன் ராகுல் குமார், பாட்னாவில் ஒரு பிரபலமான தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு சொந்தமாக ஸ்போர்ட்ஸ் பைக் இருக்கிறது. சந்தீப் யாதவின் இளைய மகன், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் தன் தாயார் ராஜந்தி குமாரியுடன் வசித்து வருகிறார். அவரும் ஸ்போர்ட்ஸ் பைக் வைத்துள்ளார். பிரபலமான கல்லூரியில் படித்து வருகிறார். சந்தீப் யாதவின் மகள் பிரபலமான பள்ளியில் படித்து வருகிறார்.

சந்தீப் மனைவி ராஜந்தி, கயா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியின் ஆசிரியை ஆவார். அவர் பள்ளிக்கே செல்வது இல்லை. இருப்பினும், அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் வைத்துள்ளார். வங்கி கணக்குகளில் ரூ.13 லட்சம் போட்டு வைத்துள்ளார். பரஸ்பர நிதியில் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். சந்தீப் யாதவின் மருமகன் கஜேந்திர நாராயண், டெல்லியில் ஆசிரியராக இருக்கிறார். வங்கி கணக்குகளில் ரூ.12 லட்சம் வைத்துள்ளார். சமீபத்தில் ரூ.35 லட்சத்துக்கு வீடு வாங்கி உள்ளார்.

போலீசாரால் 51 வழக்குகளில் தேடப்படும் மற்றொரு மாவோயிஸ்ட் பிரமுகர் பிரத்யுமன். இவரது தலைக்கு ரூ.50 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவரும், இவருடைய சகோதரரும் 250 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். சகோதரரின் மகள் பூஜா குமாரி, தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் ரூ.22 லட்சம் கொடுத்து ‘சீட்’ பெற்றுள்ளார். அவர் விமானத்தில்தான் வந்து செல்கிறார்.

இந்த அறிக்கை, மேல்நடவடிக்கைக்காக அமலாக்கப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேயிலை தோட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் சாலை ஒப்பந்ததாரர்களிடம் மாவோயிஸ்டுகள் ஆண்டுதோறும் மிரட்டி வசூலிக்கும் தொகை ரூ.1,300 கோடி இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் அவர்கள், அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story