மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் வீட்டுக்காவல் நீட்டிப்பு


மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் வீட்டுக்காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2017 3:10 AM GMT (Updated: 20 Oct 2017 3:10 AM GMT)

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

லாகூர், 

மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் 26–ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து நடத்திய அதிபயங்கர தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர், ஹபீஸ் சயீத்.தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவரான இவரும், இவரது கூட்டாளிகளும் பாகிஸ்தான் அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் லாகூர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாகாண நீதித்துறை மறு ஆய்வுக்குழு முன்பாக பலத்த பாதுகாப்புடன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.அங்கே அவர்கள் அழைத்து வரப்பட்டபோது, ஹபீஸ் சயீத்தின் ஆதரவாளர்கள் ரோஜாப்பூ இதழ்களை தூவி வரவேற்றார்கள்.நீதிபதிகள் யவார் அலி, அப்துல் சமி, ஆலியா நீலம் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது அவர்களது வீட்டுக்காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க பஞ்சாப் மாகாண அரசு மனு செய்தது.

ஆனால் ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவல் மட்டும் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. அவரது கூட்டாளிகள் 4 பேரது வீட்டுக்காவல் நீட்டிக்கப்படவில்லை, கடந்த மாதம் 25–ந் தேதி பிறப்பிக்கப்பட்ட காவல் உத்தரவின்படி, அவர்களது வீட்டுக்காவல் முடிகிறபோது, வேறு வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அவர்கள் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.


Next Story