விசாரணையின் போது காதலியுடன் சுகேஷ்; விதிமுறைகளை தளர்த்திய 7 டெல்லி போலீஸ் சஸ்பெண்ட்


விசாரணையின் போது காதலியுடன் சுகேஷ்; விதிமுறைகளை தளர்த்திய 7 டெல்லி போலீஸ் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 20 Oct 2017 1:09 PM GMT (Updated: 20 Oct 2017 1:09 PM GMT)

வழக்கு விசாரணைக்காக வந்த போது பெங்களூருவில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த சுகேஷ் சந்திரசேகருக்கு உடந்தையாக செயல்பட்ட டெல்லி போலீசார் 7 பேர் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



புதுடெல்லி,
 
தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக கூறி டி.டி.வி.தினகரனிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை ஏப்ரல் மாதம் டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. தென் இந்தியாவில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இரட்டை இலை விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு பெங்களூர் அழைத்துவரபட்ட சுகேஷ் சொகுசு ஓட்டலில் தங்கி காதலியுடன் சுற்றி திரிந்தார் என்பது தெரியவந்தது. 

பெங்களுரூவில் சுகேஷ் சந்திரசேகர் தங்கி இருந்த நாட்களில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தது வருமான வரித்துறையினர் விசாரணையில் அம்பலமானது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு உடந்தையாக செயல்பட்ட டெல்லி போலீசார் 7 பேர் பணி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில் விசாரித்ததில், கோர்ட்டு வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவித்து உள்ளார். சர்வசாதாரணமாக சுதந்திரமாக சுற்றித்திரிந்து உள்ளார். தோழி லீனா மரியாபாலுடன் பல இடங்களுக்கு சென்று நேரத்தை செலவிட்டு உள்ளார். மேலும் கோவை, சென்னையில் உள்ள கார் தரகர்களிடம் பேரம் பேசி 3 சொகுசு கார்களையும் வாங்கினார் என எங்களுடைய விசாரணையில் தெரியவந்தது என டெல்லி போலீசுக்கு வருமான வரித்துறை அறிக்கையை தாக்கல் செய்தது.

இவ்விவகாரம் தொடர்பாக ஆதாரங்களையும் காட்டிய பிறகு அந்த குற்றச்சாட்டுகளை சுகேஷ் சந்திரசேகர் ஒப்புக்கொண்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கை தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணையை தொடங்கியது. விசாரணை முடிவும் வரையில் சுகேஷ் சந்திரசேகருடன் பாதுகாப்புக்கு சென்ற 7 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். விசாரணை முடிவில் தவறு செய்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்து உள்ளது.

Next Story