உளவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த கேரள பெண் கைது


உளவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த கேரள பெண் கைது
x
தினத்தந்தி 20 Oct 2017 11:15 PM GMT (Updated: 20 Oct 2017 10:02 PM GMT)

உளவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த கேரள பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பாலக்காடு,

விசாரணையில் அவர், விமான நிலைய அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்ததும் அம்பலமானது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஆசிதா (வயது 24). இவர் பாலக்காடு நகரில் வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பகுதியில் குடியேறினார். அவர் அங்கு உள்ளவர்களிடம், தான் கோவை உளவுத்துறை போலீசில் முக்கிய அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி உள்ளார்.

இந்நிலையில் கோவை உளவுத்துறையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதால் ரூ.5 லட்சம் கொடுத்தால் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆசிதா கூறினார். இதை நம்பி அப்பகுதியை சேர்ந்த 3 பேர் ரூ.12 லட்சத்தை அவரிடம் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை.

இதனிடையே கேரளாவில் தான் வசித்த வீட்டை காலி செய்து விட்டு பொள்ளாச்சிக்கு செல்வதாக ஆசிதா கூறி சென்றார். இதனால் பணம் கொடுத்தவர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பதில் கூறவில்லை.

இதையடுத்து வேறு ஒரு செல்போன் எண்ணில் இருந்து ஆசிதாவை தொடர்பு கொண்டு உளவுத்துறையில் வேலை வாங்கித்தந்தால் பணம் தருவதாக ஆசை காட்டினர். இதனால் ஆசிதா, கோவை வைக்கம் நகர் பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் ஏற்கனவே பணம் கொடுத்த 3 பேரும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். அப்போது அவர்களிடம் ஆசிதா கடும் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் ஆசிதாவை அவர்கள் போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தனர். விசாரணையில் அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காடு நகரில் விமான நிலைய அதிகாரி மோகனை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. மோகன் தற்போது வெளிநாட்டில் உள்ளார்.

இதுகுறித்து அறிந்த மோகனின் பெற்றோர், தங்கள் மகனை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஆசிதா மீது போலீசில் புகார் தெரிவித்தனர். பண மோசடி புகாரின் பேரில் ஆசிதாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் பல பேரை ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story