பத்மாவதி விவகாரம்; மத்திய பிரதேச அரசு தடை விதிப்பு, “சூப்பர் நெருக்கடிநிலை” மம்தா பானர்ஜி விமர்சனம்


பத்மாவதி விவகாரம்; மத்திய பிரதேச அரசு தடை விதிப்பு, “சூப்பர் நெருக்கடிநிலை” மம்தா பானர்ஜி விமர்சனம்
x
தினத்தந்தி 20 Nov 2017 12:10 PM GMT (Updated: 20 Nov 2017 12:10 PM GMT)

வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் ‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார்.


கொல்கத்தா, 

  ‘பத்மாவதி’  படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுக்களும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் வரலாற்று உண்மைகள் அழிக்கப்பட்டால் ‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என சிவராஜ் சிங் சவுகான் கூறிஉள்ளார். பஞ்சாப் மாநில அரசும் இவ்வரிசையில் இணைந்து உள்ளது, வரலாற்றை அழிப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அம்மாநில முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் கூறிஉள்ளார். பத்மாவதி படத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்து உள்ளநிலையில் “சூப்பர் நெருக்கடிநிலை” என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி விமர்சனம் செய்து உள்ளார். 

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், பத்மாவதி சர்ச்சைகள் வெறும் துரதிஷ்டவசம் மட்டும் கிடையாது, கருத்து சுதந்திரத்தை அழிக்க ஒரு அரசியல் கட்சியின் கணக்கிடப்பட்ட திட்டம். இந்த சூப்பர் நெருக்கடிநிலைக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். சினிமா துறையில் இருக்கும் அனைவரும் ஒன்றாக வேண்டும், ஒரே குரலில் போராட வேண்டும் என கூறிஉள்ளார். 

Next Story