3 நாள் போராட்டம் தொடங்கியது டெல்லியை உலுக்கிய விவசாயிகள் பேரணி


3 நாள் போராட்டம் தொடங்கியது டெல்லியை உலுக்கிய விவசாயிகள் பேரணி
x
தினத்தந்தி 20 Nov 2017 9:45 PM GMT (Updated: 20 Nov 2017 7:33 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று விவசாயிகள் பிரமாண்ட பேரணியை நடத்தினார்கள்.

புதுடெல்லி, 

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்குதல், அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பதிலாக ‘உத்தரவாத குறைந்தபட்ச விலை’ நிர்ணயித்தல், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் 3 நாள் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்த போராட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதற்காக 20 மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் அணி அணியாக டெல்லிக்கு வந்தனர். மொத்தம் 182 விவசாய சங்கங்கள் இதில் பங்கேற்றன.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் குவிந்த இந்த விவசாயிகள் முதலில் தங்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அங்கிருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இதில் தமிழகத்தில் இருந்தும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளும், மற்றொரு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமானோரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் தங்கள் கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி, அரை நிர்வாணமாக சென்றனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவியர் (விதவைப்பெண்கள்) பலர் தங்கள் கணவரின் புகைப்படத்தை கையில் ஏந்தி சென்றனர்.

தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த இந்த பேரணியால் டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்த பேரணி, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள பாராளுமன்றம் தெருவை அடைந்ததும், அங்கு விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் அங்கு கண்டன கூட்டம் நடந்தது. இதில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு முதலில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் யோகேந்திர யாதவ், வி.எம்.சிங், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் மற்றும் சமூக சேவகி மேதா பட்கர், கவிதா குரு காந்தி, அவிக் சாகா உள்ளிட்டோர் பேசினார்கள்.

அதைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவியர் பங்கேற்ற மாதிரி பாராளுமன்றம் நடந்தது. ‘கிசான் முக்தி சன்சத்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் போல 543 பெண்கள் பங்கேற்றனர். இதில் கோரிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ‘கடனில் இருந்து விவசாயிகள் விடுதலை-2017’ என்ற மசோதாவை இந்திய கிசான் சபாவை சேர்ந்த ஹன்னா முல்லா என்பவரும், ‘விவசாயிகளின் விளைபொருட்களுக்கான உத்தரவாத விலை பெறும் உரிமை-2017’ என்ற மசோதாவை ‘ஸ்வபிமணி ஷேத்காரி சங்கேதன்’ அமைப்பை சேர்ந்த ராஜு ஷெட்டியும் தாக்கல் செய்தனர். இந்த மசோதாக்கள் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் அங்கிருந்து மாலை 5 மணியளவில் விவசாயிகள் மீண்டும் ராம்லீலா மைதானத்துக்கு சென்றனர்.

இந்த போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக நடைபெற உள்ளது. 3-வது நாளான நாளை (புதன்கிழமை) மறியல் போராட்டம் நடத்துவது குறித்து விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், வறட்சி நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர் கோரிக்கை மனு அளித்தனர். 

Next Story