குஜராத்தில் காங்கிரஸ் அலுவலகம் சூறை ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் ஆத்திரம்


குஜராத்தில் காங்கிரஸ் அலுவலகம் சூறை ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 20 Nov 2017 10:30 PM GMT (Updated: 20 Nov 2017 7:45 PM GMT)

2 தொகுதிகளை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் காங்கிரஸ் அலுவலகத்தை ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் சூறையாடினர்.

ஆமதாபாத், 

2 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் இதர பிறப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு கோரி பெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல். இந்த போராட்டத்தை மாநிலத்தை ஆளும் பா.ஜனதா அரசு முறியடித்தது.

இதனால் அடுத்த மாதம் (டிசம்பர்) 2 கட்டங்களாக நடைபெற இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஹர்திக் பட்டேல் விரும்பினார். காங்கிரசும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கும்படி அவருடைய அமைப்பான பதிதார் அனாமத்் அந்தோலன் சமிதி (பாஸ்) நிபந்தனை விதித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 77 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. அதில் 2 தொகுதிகளே ‘பாஸ்’ அமைப்புக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் சூரத் நகரில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். காங்கிரசுக்கு எதிராக முழக் கங்களையும் எழுப்பினர்.

இந்த நிலையில், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராஜ்கோட் நகரில் நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை ஹர்திக் பட்டேல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஒதுக்கிய 2 தொகுதிகளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டாம் என்று ஹர்திக் பட்டேல் தனது ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார். அதையும் மீறி தரோஜி தொகுதியில் போட்டியிட பாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான லலித் வசோயா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Next Story