டெங்கு காய்ச்சலில் பலியான சிறுமியின் பெற்றோரிடம் ரூ.18 லட்சம் கேட்ட தனியார் ஆஸ்பத்திரி


டெங்கு காய்ச்சலில் பலியான சிறுமியின் பெற்றோரிடம் ரூ.18 லட்சம் கேட்ட தனியார் ஆஸ்பத்திரி
x
தினத்தந்தி 21 Nov 2017 11:30 PM GMT (Updated: 21 Nov 2017 6:21 PM GMT)

டெங்கு காய்ச்சலில் பலியான சிறுமியின் பெற்றோரிடம் ரூ.18 லட்சம் கேட்டு தனியார் ஆஸ்பத்திரி பில் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

மேற்கு டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் ஜெயந்த் சிங். டெல்லியை அடுத்த குர்கானில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார்.

இவரது மகள் ஆத்யா சிங் (வயது 7). இரண்டாம் வகுப்பு மாணவி.

இந்த சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். குர்கானில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையான போர்ட்டிஸ் மெமோரியல் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஆகஸ்டு மாதம் 31–ந்தேதி அனுமதிக்கப்பட்டாள். அனுமதிக்கப்பட்ட நாள் முதல் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது.

உயிரிழப்பு

மருத்துவ காப்பீடு செய்துள்ள நிலையில் ரூ.10 லட்சத்துக்கும் மேலாக மருத்துவமனையில் அவருடைய பெற்றோர் செலுத்தி உள்ளனர். எப்படியாவது மகளை காப்பாற்றி விட மாட்டோமா என்ற பரிதவிப்பில் தொடர்ந்து லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தச் சிறுமி செப்டம்பர் 14–ந்தேதி உயிரிழந்தாள்.

இந்த சிறுமிக்கு ஊசி மருந்து செலுத்த 660 சிரிஞ்சி, டாக்டர்கள் அணிவதற்கு 2,700 கையுறைகள் வாங்கியது உள்பட மொத்தம் சுமார் ரூ.18 லட்சத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பில் போட்டுள்ளனர்.

மகளின் அகால மரணத்தால் மனம் உடைந்து போன நிலையில் காணப்படுகிற ஜெயந்த் சிங், 20 பக்கங்களைக் கொண்ட மருத்துவமனையின் பில்லைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.

அந்த 7 வயது சிறுமிக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 44 ஊசி வீதம் 15 நாளில் 660 ஊசி போட்டுள்ளனர்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கண்டறிவதற்கான பட்டை ஒன்றுக்கு ரூ.200 கட்டணம் போட்டுள்ளனர். இதன் விலை ரூ.13 தான்.

டுவிட்டர் தகவலால் மருத்துவமனை மறுப்பு

இந்த அவலம் பற்றி ஜெயந்த் சிங்குடன் வேலை செய்கிற சக பணியாளர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டார். அது மின்னல் வேகத்தில் தீவிரமாக பரவியது.

உடனே அவசர அவசரமாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ‘‘சிறுமியின் மருத்துவ சிகிச்சை நடைமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளது, எல்லா மருத்துவ வழிகாட்டல்களும் பின்பற்றப்பட்டுள்ளன, கட்டணமாக ரூ.15 லட்சத்து 79 ஆயிரம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி நடவடிக்கை

இந்த விவகாரம் குறித்து அறிந்ததும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கருத்து தெரிவித்த அவர், சம்மந்தப்பட்ட மருத்துவமனையிடம் இருந்து விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.

இதுபற்றி டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் விசாரித்தேன். சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கை அளிக்குமாறு கூறி உள்ளேன். இந்த விவகாரத்தை கவனிக்குமாறு சுகாதாரத்துறை செயலாளரையும் கேட்டுள்ளேன்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தினர், சிறுமி ஆத்யா சிங்குக்கு மருத்துவ சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்று புகார் கூறி இருப்பதுடன், இது தொடர்பாக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து அரியானா மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதில் அரியானா அரசு தலையிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story