“நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” தடயவியல் ஆய்வில் உறுதியானது


“நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” தடயவியல் ஆய்வில் உறுதியானது
x
தினத்தந்தி 22 Nov 2017 9:30 PM GMT (Updated: 22 Nov 2017 8:08 PM GMT)

“நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” என்று டெல்லியில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் உறுதியாகி உள்ளது.

பெங்களூரு,

“நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” என்று டெல்லியில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் உறுதியாகி உள்ளது.

நித்தியானந்தா சாமியார்

ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு ராமநகர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் ராமநகர் கோர்ட்டில் சி.ஐ.டி. போலீசார், நித்தியானந்தா சாமியார் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். அதனுடன் நடிகை ரஞ்சிதாவுடன், நித்தியானந்தா சாமியார் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட அறிக்கையையும் போலீசார் தாக்கல் செய்திருந்தார்கள்.

தடயவியல் அறிக்கையில் உறுதி

ஆனால் சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த தடயவியல் அறிக்கை பொய்யானது என்றும், நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக தடயவியல் அறிக்கை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், நித்யானந்தா சாமியார் சார்பில் ஆஜரான வக்கீல் கூறி இருந்தார்.

இதையடுத்து, நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா சாமியார் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் அடங்கிய 2 மெமரி கார்டுகள், 2 ஆடைகளை டெல்லியில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்படி, டெல்லியில் ஆய்வு நடத்தப்பட்டு வந்தது.

அந்த மெமரி கார்டுகளில் உள்ள வீடியோ காட்சிகளில் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது நித்தியானந்தா சாமியார் தான் என்றும், அந்த வீடியோ காட்சிகள் ‘எடிட்’ செய்யப்படவில்லை என்றும் ஆய்வில் சமீபத்தில் உறுதியானது.

இதுதொடர்பான தடயவியல் அறிக்கை பெங்களூரு சி.ஐ.டி. போலீசாருக்கு, டெல்லியை சேர்ந்த டாக்டர் சி.பி.சிங் அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த அறிக்கையை சி.ஐ.டி. போலீசார், விரைவில் ராமநகர் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்றும் நேற்று தகவல் வெளியானது.

ஆசிரமம் முன்பு பரபரப்பு

இந்த தகவல் வெளியானதும் நேற்று பிடதியில் உள்ள அவரது ஆசிரமம் முன்பு கன்னட அமைப்பினர் திரண்டார்கள். அவர்கள் நித்தியானந்தா சாமியாருக்கு எதிராக திடீரென்று ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அப்போது அவர்கள் ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா வெளியேற வேண்டும், அவரது சொத்துகளை அரசு ஜப்தி செய்ய வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் ஆசிரமத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றார்கள்.

ஆசிரமம் முன்பு நித்தியானந்தா சாமியார் உருவப்படத்துடன் இருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தார்கள். ஆசிரமத்தின் முன்பக்கத்தில் உள்ள இரும்பு கதவின் மீறி ஏறியும் கன்னட அமைப்பினர் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி அறிந்ததும் பிடதி போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரிடம் சமாதானமாக பேசி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

Next Story