மோடி துக்ளக்! நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது மம்தா பானர்ஜி தாக்கு


மோடி துக்ளக்! நாட்டில்  சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது மம்தா பானர்ஜி தாக்கு
x
தினத்தந்தி 24 Nov 2017 10:32 AM GMT (Updated: 24 Nov 2017 10:31 AM GMT)

மோடி துக்ளக் போல் செயல்படுகிறார். நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நடந்து வருகிறது என மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

மேற்கு வங்காளத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்யவருவது இல்லை. அவர்கள்( மத்திய அரசு) அங்கு செல்லாதீர்கள் என கூறுகிறார்கள். எங்கள் திட்டங்கள் எல்லாம் நிலுவையில் உள்ளன.  நாட்டில் தற்போது கூட்டாட்சி இல்லை. சூப்பர் எமர்ஜென்சி நடந்து வருகிறது. அனைத்து தொழிலதிபர்களும் கண்காணிப்பில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் எப்படி செயல்படுவார்கள். அனைத்து மீடியாக்களும் கண்காணிப்பில் உள்ளனர். மோடி துக்ளக் போல் செயல்படுகிறார்.

ஜிஎஸ்டி குழுவில் உள்ள மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ராவால் மட்டுமே எதுவும் செய்ய முடியாது. பார்லிமென்டில் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டது. அவசர கதியில் இதை நிறைவேற்ற வேண்டாம் எனக்கூறினோம். கறுப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டு வாபஸ் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் பற்றி நிதியமைச்சருக்கு தெரியாது. பயங்கரவாதம் கட்டுக்குள் வரும் என மத்திய அரசு கூறியது.

ஆனால், தற்போது காஷ்மீரில் பயங்கரவாதம் முன்பை விட 12 சதவீதம் அதிகரித்துள்ளது. நான் பிரதமருக்கு எதிராக ஏதேனும் கூறினால், அவரது அமைச்சர்கள் என்னை அழைத்து மோடிக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள் என கேட்கின்றனர். இது எனது அரசியல் உரிமை. சரி எது என நினைக்கிறேனோ அதை சொல்வேன் என பதிலளித்து வருகிறேன்.

தனிப்பட்ட யார் மீதும் எனக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது.மேற்கு வங்கம், விவேகானந்தர் , ரவிந்தரநாத் தாகூர் ஆகியோர் பிறந்த மண். பிரிவினைவாத அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள். பிரிவினை திரினாமுல் காங்கிரஸ்  பா.ஜ., போட்டி கட்சி இல்லை. பா.ஜ., கோஷம் மட்டும் போட்டு கொண்டிருக்கட்டும்.

மேற்கு வங்கத்தில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. பா.ஜ., பிரிவினைவாத அரசியல் செய்து வருகிறது. பா.ஜ.,வால், என்னை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாது. இதனால், அவர்கள் மாநிலத்தில் பிரிவினையை தூண்டி வருகின்றனர் மேற்கு வங்கத்தில் அக்கட்சி எங்கும் இல்லை. மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தான் உள்ளார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story